ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவு
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். ஆட்டோ டிரைவர். இவரது மகன் பிரேம்குமார் (வயது 15). இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பிரேம்குமார் பள்ளிக்கு சென்று வந்த பிறகு மண்ணூரில் இருந்து வளர்புரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு அரக்கோணம் சென்னை நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புரம் அருகே சென்னை நோக்கி சென்ற லாரி மோதி கீழே விழுந்தார்.
இதில் லாரி சக்கரத்தில் சிக்கி பிரேம்குமார் பரிதாபமாக இறந்தார். லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேம் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.