ஆவடியில் கடைகளில் பூட்டை உடைத்து திருடிய 10-ம் வகுப்பு மாணவன்


ஆவடியில் கடைகளில் பூட்டை உடைத்து திருடிய 10-ம் வகுப்பு மாணவன்
x

ஆவடியில் 3 கடைகளின் பூட்டை உடைத்து திருடிய 10-ம் வகுப்பு மாணவனை கைது செய்த போலீசார், பாலிடெக்னிக் மாணவரை தேடி வருகின்றனர்.

சென்னை

திருவேற்காடு அடுத்த சின்னகோலடி ஜெயம் நகரில் வசிப்பவர் சிலம்பரசன். இவர் ஆவடி காந்தி நகர் மற்றும் காந்தி நகர் அண்ணா தெருவில் 2 பால் கடைகளை வைத்து நடத்தி வருகிறார். மர்மநபர்கள் இவரது 2 பால் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.17 ஆயிரத்து 500 மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

அதேபோல் ஆவடி காந்திநகர் அண்ணா தெருவில் உள்ள ராஜா என்பவரது மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.8 ஆயிரத்து 500 மற்றும் ஆதார் கார்டு, குடும்ப அட்டை, கடை உரிமம் சான்று உள்ளிட்டவற்றை திருடி சென்றுவிட்டனர்.

அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு போன சம்பவம் தொடர்பாக ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களின் உருவத்தை வைத்து சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், தனது நண்பரான பாலிடெக்னிக் படிக்கும் 17 வயது மாணவருடன் சேர்ந்து 3 கடைகளிலும் திருடியதை ஒப்புக்கொண்டார். 10-ம் வகுப்பு மாணவரை கைது செய்த போலீசார், தலைமறைவான பாலிடெக்னிக் மாணவரை தேடி வருகின்றனர்.

அதேபோல் சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், சி.டி.ஓ. காலனியை சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய கண்காணிப்பாளரான கண்ணன், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான திருச்சிக்கு சென்று விட்டார். நேற்று காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம் பக்கத்தினர் கண்ணன் மற்றும் தாம்பரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

தாம்பரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தலையில் தொப்பி அணிந்தபடி வரும் மர்மநபர் ஒருவர், அவரது வீட்டின் பூட்டை உடைத்து சிலிண்டரை திருடிச் செல்வதும், மற்றொரு வீட்டில் பறவைகளுடன் கூண்டை திருடிச்செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

மேலும் 3 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தாம்பரத்தை அடுத்த சேலையூர் மகாலட்சுமி நகர், இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன்(75). ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான இவர், தற்போது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவருடைய மருமகன் மீனாட்சி சுந்தரம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கலெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

சேலையூரில் உள்ள பாஸ்கரன் வீட்டை பானுமதி என்பவர் பராமரித்து வந்தார். ஒரு மாதமாக பணிக்கு வராமல் இருந்த பானுமதி, நேற்று முன்தினம் பாஸ்கரன் வீ்ட்டுக்கு வந்தார். அப்போது பாஸ்கரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோ, அலமாரியில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது. நகை, பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் வந்த கொள்ளையர்கள் வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லாதததால் ஏமாற்றுத்துடன் திரும்பிச்சென்றது தெரிந்தது.

இது குறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story