பைக் மோதியதில் மூளைச்சாவு: வேலூரில் 11 வயது சிறுவன் உடல் உறுப்புகள் தானம்
குடியாத்தம் அருகே பைக் மோதிய விபத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன் உடல் உறுப்புகள் தானம் செய்ய பெற்றோர்கள் முன் வந்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொசவன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருடைய மூத்த மகன் சுதீஷ் (வயது 11) அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தந்தையுடன் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக குடியான் குப்பம் மெயின் ரோட்டில் சுதீஷ் நின்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அடுக்கமாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவனது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் முன் வந்தனர்.
சிறுவனின் இதயம், கல்லீரல், கிட்னி, கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டு வேலூர் சிஎம்சி மற்றும் சென்னை தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சிறுவன் சுதீசுக்கு கோகுல், ரோகித் என இரு சகோதரர்கள் உள்ளனர்.