காஞ்சீபுரத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சியில் 121 வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சீபுரத்தில் லோக் அதாலத் நிகழ்ச்சியில் 121 வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
காஞ்சீபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் காஞ்சீபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை கையாளும் வகையில் சிறப்பு லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்-2 நீதிபதி (பொறுப்பு) இளங்கோவன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், கூடுதல் சார்பு நீதிபதியுமான திருஞானசம்பந்தம் கலந்துகொண்டார்.
இதில் சுமார் 150 வழக்குகள் கையாள திட்டமிடப்பட்டு அதற்கான மனுதாரர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் இன்சூரன்ஸ் துறை நிறுவனங்கள் அழைக்கப்பட்டனர். இறுதியாக 121 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீடு தொகையாக பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 71 லட்சத்து 5 ஆயிரத்து 300 வழங்கப்பட்டதாக நீதிமன்ற குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வக்கீல்கள் பத்மநாபன், வடிவேல், நீதிமன்ற ஊழியர்கள் மனுதாரர்கள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.