கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 13 பேர் கைது


கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 13 பேர் கைது
x

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

கத்தியை காட்டி மிரட்டல்

ஸ்ரீரங்கம் மேலூர் வடக்குதெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26). இவர் அந்த பகுதியில் நடந்து சென்றபோது, மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் ரூ.500-ஐ பறித்தார். இது குறித்து அஜித்குமார் அளித்த புகாரில் ரமேஷை போலீசார் கைது செய்தனர். திருச்சி ஜெயில்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (22). இவர் தட்டுரிக்‌ஷா தொழிலாளி. சம்பவத்தன்று இவர் காந்திமார்க்கெட் பழைய மீன்மார்க்கெட் அருகே சென்றபோது, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி வரகனேரியை சேர்ந்த ஜாக்கிஜான் (26), மாடசாமி (22) ஆகியோர் ரூ.1,000-த்தை பறித்தனர். இது குறித்து காந்திமார்க்கெட் போலீசில் அளித்தபுகாரில் 2 பேரையும் கைது செய்தனர்.

பணம் பறிப்பு

திருச்சி பாலக்கரை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக நவநீதகிருஷ்ணன், ஜஸ்டின் கிறிஸ்துராஜ், விமல்ராஜ், அர்ஷாத்முகமது ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதேபோல் உறையூர், தென்னூர், பொன்மலைப்பட்டி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பகுதிகளை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக மேலும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். திருச்சியில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் மட்டும் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சாவிற்ற 3 பேர் கைது

*திருச்சி உறையூர் காராளம்மன் கோவில் தெரு அருகே கஞ்சா விற்ற உறையூர் கீழபாண்டமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற ராஜூ (31) என்பவரை உறையூர் போலீசார்கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திருச்சி சின்னகொத்தமங்கலம் பகுதியில் கஞ்சா விற்றதாக அதேபகுதியை சேர்ந்த லாவண்யாவை (32) கைது செய்து, அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சி காஜாப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்றதாக புதுத்தெருவை சேர்ந்த கொளஞ்சி (33) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.

கணவர் மாயம்; மனைவி போலீசில் புகார்

*முசிறியை அடுத்த மேலக்கோட்டூரை சேர்ந்த அசோக் குமார். இவர் முசிறியில் உள்ள தனியார் டிரைவிங் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து குமாரின் மனைவி லோகாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story