ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது


ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
x

திருத்தணி அருகே மின்சார ரெயிலில் ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 14 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 வாலிபர்களை கைது செய்தனர்.

திருவள்ளூர்

தீவிர ரோந்து பணி

ஆந்திர மாநிலத்திருந்து தமிழகத்திற்கு வரும் ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் திருத்தணி அடுத்த பொன்பாடி ரெயில் நிலையத்தில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஆந்திராவிலிருந்து புதுச்சேரி நோக்கி செல்ல வேண்டிய மின்சார ரெயில் நேற்று காலை பொன்பாடி ரெயில் நிலைய நடைமேடைக்கு வந்தடைந்தது. அதில், போலீசார் ஏறி சோதனை செய்தனர். அப்போது ரெயிலில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த 3 வாலிபர்களின் உடைமைகளை போலீசார் தீவிர சோதனைக்குட்படுத்தினர்.

3 பேர் கைது

அதில் 14 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனே கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (வயது 30), செங்குன்றம் அலமாதி பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் ஜோயல் (23), சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுதாகர் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சாவை ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருத்தணி மதுவிலக்கு அமலாக்க தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story