குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 15,151 பேர் கைது
குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 15,151 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
172 பேர் மீது குண்டர் சட்டம்
திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 15 ஆயிரத்து 151 பேர் மீது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள், குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், போதை பொருட்களை விற்பனை செய்தவர்களை கண்டறிந்து கடந்த 2020-ம் ஆண்டு 37 பேர் மீதும், கடந்த ஆண்டு 85 பேர் மீதும், இந்த ஆண்டில் 11 மாதங்களில் 172 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறை தண்டனை
பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா போன்வற்றை விற்பனை செய்த 224 பேர் மீது கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 16 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். நன்னடத்தைக்கான பிணையம் பெற வேண்டி 1,306 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நன்னடத்தைக்கான பிணையம் பெற்றிருந்தும், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு பிணையத்தை மீறிய 31 ரவுடிகள் உள்பட 51 பேர் மீது திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவரால் சிறை தண்டனை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கமிஷனர் எச்சரிக்கை
மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 708 பேரில் 6 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தும், லாட்டரி சீட்டுகள் விற்ற 110 பேர் மீதும், சூதாட்டத்தில் ஈடுபட்ட 136 பேர் மீதும், சட்டவிரோதமாக மதுபானங்களை விற்ற 1,392 பேர் மீதும் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக 11,454 பேர் மீது உரிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், வழிப்பறி குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார்.