காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 157 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 157 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
காஞ்சீபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் படி லோக் அதாலத் தொடங்கியது. மாவட்ட நீதிபதி செம்மல் தொடக்கி வைத்தார். நீதிபதிகள் இனிய கருணாகரன், வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான கே.எஸ்.அருண்சபாபதி வரவேற்று பேசினார்.
விழாவின் தொடக்கத்தில் 3 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான இழப்பீடுகளை மாவட்ட நீதிபதி செம்மல் வழங்கினார். குடும்ப நல வழக்கு, மோட்டார் வாகன வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, காசோலை வழக்கு உள்ளிட்ட 157 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
இதன் மூலம் பல்வேறு பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2 கோடியே 79 லட்சத்து 23 ஆயிரத்து 76 இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டது. லோக் அதாலத் தொடக்க விழாவில் மூத்த வக்கீல்கள், காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.