சென்னை அண்ணாசாலையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் - 2 கல்லூரி மாணவர்கள் கைது


சென்னை அண்ணாசாலையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் -  2 கல்லூரி மாணவர்கள் கைது
x

சென்னை அண்ணா சாலையில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ரேசில் ஈடுபட்டனர்.

சென்னை

சென்னை அண்ணா சாலையில் நேற்று இரவு கல்லூரி மாணவர்கள் 4 பேர் மிகவும் ஆபத்தான முறையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் சாகசம் மற்றும் ரேசில் ஈடுபட்டனர். இதில், ஒரு மாணவர் விலை உயர்ந்த தனது மோட்டார் சைக்கிளின் முன்பக்க சக்கரத்தை தலைக்கு மேல் தூக்கியபடி பின்பக்க சக்கரத்தை மட்டும் பயன்படுத்தி(வீலிங்) நீண்டதூரம் மேட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மோட்டார் சைக்கிள் சாகசம் மற்றும் ரேசில் ஈடுபட்டது ஆம்பூரைச் சேர்ந்த முகமது ஹரீஸ் (வயது 19), செபன் (18), மாஸ் மற்றும் ஐதரபாத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பினாய் என்பது தெரியவந்தது. அலெக்ஸ் பினாய் தான் முன்சக்கரத்தை தூக்கியபடி பின்சக்கரத்தை மட்டும் பயன்படுத்தி மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதும், மற்ற 3 மாணவர்களும் அவரை பின்தொடர்ந்தும் சென்றதும் தெரிய வந்தது.

இந்த வழக்கில் முகமது ஹரீஸ், செபன் ஆகிய 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் முகமது ஹரீஸ் சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியிலும், செபன் சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்திலும் படித்து வருகின்றனர். மற்ற 2 மாணவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


Next Story