சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடியே 18 லட்சம் மதிப்புடைய 4 கிலோ 167 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த 2 பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் 2 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் விலை உயர்ந்த 20 ஐபோன்களை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் 2 பேரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் இருவரும் அணிந்து இருந்த ஷூ, சாக்ஸ்களில் மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பைகளில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 965 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் முழங்காலில் அடிபட்டதுபோல பெரிய கட்டுப்போட்டு இருந்தார். அது பற்றி அதிகாரிகள் கேட்டபோது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கட்டுபோட்டு வலியுடன் நடந்து வருவதாக கூறினார்.
ஆனால் அதற்கான மருத்துவ சான்றிதழ் எதுவும் அவரிடம் இல்லை. எனவே சுங்க அதிகாரிகள் அவர் முழங்காலில் போடப்பட்டிருந்த கட்டை பிரித்துப் பார்த்தனர். இதில் அவருக்கு காலில் காயம் எதுவும் இல்லை. ஆனால் கட்டுக்குள் ஒரு பை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் 1 கிலோ 228 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும் சென்னை பன்னாட்டு விமான நிலைய வருகை பகுதியில் உள்ள கழிவறையை விமான நிலைய ஊழியர்கள் சுத்தப்படுத்தும் போது அதன் தண்ணீர் தொட்டிக்குள் பார்சல் ஒன்று இருந்தது. இதுபற்றி சுங்க அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். சுங்க அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்துப்பார்த்தபோது அதனுள் 974 கிராம் தங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பயணிகள் மற்றும் விமான நிலைய கழிவறையில் இருந்து மொத்தம் ரூ.2 கோடியே 18 லட்சம் மதிப்புடைய 4 கிலோ 167 கிராம் தங்கமும், ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 20 ஐபோன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.