தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி - நண்பரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று விட்டு திரும்பியபோது பரிதாபம்


தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி - நண்பரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று விட்டு திரும்பியபோது பரிதாபம்
x

நண்பரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று விட்டு திரும்பியபோது தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியானார்கள்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆரனேரி பகுதியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன்(வயது 31). கருணாகரன் (29). இவர்கள் இருவரும் நண்பர்கள். பாலகிருஷ்ணன் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள தனியார் கண்ணாடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும் சொந்தமாக மினி லாரி வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்தார். கருணாகரன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு காஞ்சீபுரத்தில் நடைபெற்ற நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாலகிருஷ்ணன், கருணாகரன் இருவரும் மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரத்திற்கு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு ஏனாத்தூர் வழியாக சென்றபோது மோட்டார் சைக்கிள் அங்கு இருந்த தரைப்பால தடுப்புச்சுவரில் மோதியது.

இதில் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். பாலத்தின் கீழே தண்ணீர் தேங்கி இருந்ததால் மூச்சுத்திணறி பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலகிருஷ்ணனின் உடலை மீட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கருணாகரனை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கருணாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு வீட்டுக்கு திரும்பும் போது நண்பர்கள் 2 பேர் விபத்தில் மரணம் அடைந்த சம்பவம் ஆரனேரி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story