தோல் வியாபாரி கடத்தல் வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது


தோல் வியாபாரி கடத்தல் வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 July 2023 4:53 PM GMT (Updated: 3 July 2023 9:20 AM GMT)

பேரணாம்பட்டில் ரூ.5 லட்சம் கேட்டு தோல் வியாபாரியை கடத்திய வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்

தோல் வியாபாரி கடத்தல்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் முஹம்மதலி 4-வது தெருவை சேர்ந்தவர் ரியாசூர் ரஹ்மான் (வயது 26), தோல் வியாபாரி. இவர் கடந்த மே மாதம் 27-ந் தேதி பேரணாம்பட்டு வீ.கோட்டா ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை முன்பு டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 6 நபர்கள் காரில் வந்து அவரை கடத்தி சென்றனர். பின்னர் அவரை அடித்து துன்புறுத்தி மிரட்டி ரூ.5 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆம்பூர் அருகே உள்ள விண்ணமங்கலம் பகுதியில் கார் சென்ற போது ரியாசூர் ரஹ்மானின் 2 செல்போன்களை பறித்துக் கொண்டு கூகுள்பே மூலம் ரூ.50 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு அவரை காரிலிருந்து இறக்கி விட்டு காரில் வந்த கும்பல் தப்பி சென்றது.

மீண்டும் மிரட்டல்

இதற்கிடையில் மீண்டும் அந்த கும்பல் ரியாசூர் ரஹ்மானை அடிக்கடி தொடர்பு கொண்டு மீண்டும் ரூ.5 லட்சம் கேட்டும், பணம் தராவிட்டால் உனது குழந்தைகளை கடத்துவோம் என மிரட்டி வந்தனர்.

இச்சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் ரியாசூர் ரஹ்மான் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அவரது தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.

2 பேர் கைது

இதில் ரியாசூர்ரஹ்மானை கடத்துவதற்கு உடந்தையாக இருந்த பேரணாம்பட்டு திரு.வி.க. நகரை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவர், தரைக்காடு பகுதியை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் தவுபிக் பாஷா (32) ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை காட்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story