தமிழக சட்டசபையை முடக்கக்கோரிய வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி
நம்பிக்கை தீர்மானத்துக்கு எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதால் தமிழக சட்டசபையை முடக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:–தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனம், மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணனின் ரகசிய உரையாடல் ஒன்றை வெளியிட்டது.
அதில், நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்கு ரூ.2 கோடி முதல் ரூ.6 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், தங்க நகைகளும் கொடுக்கப்பட்டதாகவும் சரவணன் கூறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. மேலும் கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.10 கோடி கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுத்து நம்பிக்கை தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமியும், அவரது தரப்பினரும் வெற்றி பெற செய்துள்ளனர் என்பது தெரிகிறது. எனவே, இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழக சட்டசபையில் பல மசோதாக்கள் விவாதம் நடைபெறாமலேயே நிறைவேற்றப்படுகிறது.எனவே, தமிழக சட்டசபையை முடக்கம் செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் டிராபிக் ராமசாமி நேரில் ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர், ‘சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், சட்டசபைக்கு வரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது வாகனங்களில் ஜெயலலிதாவின் படத்தை வைத்துள்ளனர். அதேபோன்று தங்களது சட்டைப்பையில் ஜெயலலிதா படத்தை வைத்துள்ளனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்றார். மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.