அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை ரத்து


அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை ரத்து
x
தினத்தந்தி 6 July 2017 3:45 AM IST (Updated: 5 July 2017 11:28 PM IST)
t-max-icont-min-icon

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சேலத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:–

நான், முதுகலை என்ஜினீயரிங் படிப்பு(எம்.இ.) முடித்துள்ளேன். தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 26.6.2017 அன்று தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

அதில், இந்த பணியிடங்களுக்கு இளநிலை என்ஜினீயரிங் படிப்பில் (பி.இ.) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. முதுகலை என்ஜினீயரிங் படிப்பு(எம்.இ.) முடித்தவர்கள் விண்ணப்பிப்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதனால், முதுகலை என்ஜினீயரிங் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. இந்த நடவடிக்கை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளுக்கு எதிரானதாகும். பி.இ. படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், மேற்படிப்பான எம்.இ. படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுகின்றனர்.

எனவே, பி.இ. படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப 26.6.2017 அன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளை பின்பற்றி புதிய அறிவிப்பாணை வெளியிட்டு அதன் அடிப்படையில் விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பித்தார்.


Next Story