சென்னையில் டிராவல்ஸ் நிறுவனங்களின் கார்களை திருடி விற்க முயன்றவர் கைது


சென்னையில் டிராவல்ஸ் நிறுவனங்களின் கார்களை திருடி விற்க முயன்றவர் கைது
x
தினத்தந்தி 19 July 2017 5:15 AM IST (Updated: 18 July 2017 11:55 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான கார்களை திருடி விற்பனை செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

அவரிடம் இருந்து 6 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை, கே.கே.நகர் ராஜமன்னார் சாலை கிழக்கு வன்னியர் தெரு சந்திப்பில் நேற்று முன்தினம் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர்.

அந்த காரில் இருந்த ஆர்.சி.புத்தகம் போன்ற ஆவணங்களை ஆய்வு செய்த போது அவை போலியானவை என்பதும் அந்த காரை ஓட்டி வந்தவர் அதனை திருடி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரித்தபோது அவர் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த அப்துல் ஹமீது(வயது 44) என்பது தெரியவந்தது.

உடனே அப்துல் ஹமீதை போலீசார் கே.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் இதேபோல மேலும் 5 கார்களை திருடி போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ய தயாராக வைத்திருப்பது தெரியவந்தது.

வளசரவாக்கம் மற்றும் திரு.வி.க.நகரில் செயல்படும் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான அந்த கார்களை போலி சாவியை பயன்படுத்தி திருடி வந்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

கார்களை திருடி விற்பதற்கு அப்துல் ஹமீதுக்கு உறுதுணையாக செயல்பட்ட அவரது நண்பர்கள் அகஸ்டின், நல்லையன் ஆகியோர் ஏற்கனவே கார் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அப்துல் ஹமீதை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 6 கார்களை பறிமுதல் செய்தனர். பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story