விபத்தில் மகன் பலியானதற்கு இழப்பீடு கேட்டு 24 ஆண்டுகள் போராடிய தாய்


விபத்தில் மகன் பலியானதற்கு இழப்பீடு கேட்டு 24 ஆண்டுகள் போராடிய தாய்
x
தினத்தந்தி 7 Aug 2017 3:45 AM IST (Updated: 7 Aug 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் மகனை இழந்து, இழப்பீட்டுக்காக 24 ஆண்டுகள் போராடிய தாயிடம் சென்னை ஐகோர்ட்டு வருத்தம் தெரிவித்துள்ளது.

சென்னை,

1993–ம் ஆண்டு அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி நடந்த விபத்தில், லாரி டிரைவர் லோகேஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இதையடுத்து, தொழிலாளர் இழப்பீட்டு சட்டத்தின் கீழ், அவரது தாயார் பாக்கியம் இழப்பீடு கேட்டு, தொழிலாளர் நல ஆணையரிடம் மனு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஆணையர், பிரேத பரிசோதனை அறிக்கையில் லோகேஸ்வரன் பெயர் இல்லை என்று கூறி, அந்த மனுவை நிராகரித்து விட்டார். இதையடுத்து, சேலத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்துக்களை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில், பாக்கியம் ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ரூ.3.47 லட்சத்தை இழப்பீடாக நிர்ணயம் செய்து, அந்த தொகையை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் பாக்கியத்துக்கு வழங்கவேண்டும் என்று கடந்த 2007–ம் ஆண்டு உத்தரவிட்டது. அதில் இந்த இழப்பீட்டு தொகையை, விபத்துக்குள்ளான லாரியின் உரிமையாளர், லாரி காப்பீடு செய்யப்பட்டுள்ள காப்பீட்டு நிறுவனம் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் வழங்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதில், இழப்பீடு கேட்டு தொழிலாளர் நல ஆணையரிடம் செய்யப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு அமைப்பிடம் இழப்பீடு கேட்டு விண்ணப்பம் செய்து விட்டு, அங்கு தோல்வியடைந்த பின்னர் நீதிமன்றத்தில் அதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்வது ஏற்க முடியாது. எனவே தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி என்.சே‌ஷசாயி விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

தொழிலாளர் நல ஆணையரிடம் முதலில் முறையிடப்பட்டாலும், அங்கு இழப்பீடு குறித்து பரிசீலிக்கப்படவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் பெயர் இல்லை என்பதால், மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனால், இழப்பீடு கேட்டு தீர்ப்பாயத்தில் பாக்கியம் வழக்கு தொடர்ந்துள்ளார். ஒருவேளை, தொழிலாளர் நலத்துறை ஆணையர், இழப்பீட்டை நிர்ணயம் செய்திருந்தால், அதற்கு மாறாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரமுடியாது. அப்படி ஒரு நிலை இந்த வழக்கில் இல்லை என்பதால், காப்பீட்டு நிறுவனத்தின் முறையீட்டை ஏற்க முடியாது.

மேலும் விபத்தில் இறந்தவர் லோகேஸ்வரன் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால், ரூ.3.47 இழப்பீடு நிர்ணயம் செய்து, தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதில் தவறு இல்லை. காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு மனுவை முடித்து வைக்கிறேன். தீர்ப்பாயம் நிர்ணயம் செய்துள்ள ரூ.3.47 லட்சத்தை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் பாக்கியத்துக்கு 4 வாரத்துக்குள் வழங்கவேண்டும்.

அதேநேரம், 1993–ம் ஆண்டு நடந்த விபத்தில், தன் மகனை பாக்கியம் இழந்துள்ளார். மகனை இழந்த அவர், இழப்பீடு பெற 24 ஆண்டுகள் போராடியுள்ளார். அவரது போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இருந்தாலும், சட்டப்படியான உரிமையை பெறுவதற்காக இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வைத்ததற்காக, இந்த ஐகோர்ட்டு வருத்தம் தெரிவிக்கிறது. இவ்வாறு நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.


Next Story