ஓவிய ஆசிரியர்களுக்கான நியமனத்தை எதிர்த்து வழக்கு; பள்ளி கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


ஓவிய ஆசிரியர்களுக்கான நியமனத்தை எதிர்த்து வழக்கு; பள்ளி கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Aug 2017 4:15 AM IST (Updated: 15 Aug 2017 9:26 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

சென்னை,

நான், அரசு பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நிரந்தர ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 20.7.2017 அன்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தமிழக அரசின் தொழில்கல்வி இயக்குனரகம் அளித்து வரும் 5 ஆண்டு ஓவிய ஆசிரியர் பயிற்சி அல்லது சென்னை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் அளித்து வரும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஓவிய ஆசிரியர் பணிக்கு இந்த கல்வி தகுதி அதிகபட்சமானது ஆகும். பள்ளி கல்வித்துறையின் சிறப்பு விதி ஓவிய ஆசிரியர் பணிக்கான கல்வி தகுதியை நிர்ணயம் செய்துள்ளது.

இந்த சிறப்பு விதிக்கு புறம்பாக நிரந்தர ஓவிய ஆசிரியர் பணிக்கான கல்வி தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறப்பு விதிகளின்படி போதிய கல்வி தகுதி மற்றும் அனுபவம் போன்றவற்றை பெற்றுள்ள என்னை போன்றவர்கள் நிரந்தர ஓவிய ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, பள்ளி கல்வித்துறை சிறப்பு விதிகளின்படி போதிய கல்வி தகுதியை பெற்றவர்களுக்கும் ஓவிய ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். முடிவில், இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story