மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் ஓராண்டுக்குள் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் திறனை பெறுவார்களா?
மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் ஓராண்டுக்குள் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் திறனை பெறுவார்களா? என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இதனால் எந்த பயனும் ஏற்படாது. மாறாக, தமிழகத்தின் மீது ‘நீட்’ தேர்வு நிரந்தமாக திணிக்கப்படும்.
‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறுவதற்கான சட்டத்தில் கூறப்பட்டுள்ள காரணங்களும், ஓராண்டு விலக்கு பெறுவதற்கான அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ள காரணங்களும் ஒன்று தான். கால அளவு மட்டுமே மாறுபடுகிறது. ‘நீட்’ தேர்வு மத்திய அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றி நடத்தப்படுவதால் அதை எதிர்கொள்ளும் திறன் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் தான் ‘நீட்’ தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசும், மாநில அரசும் கூறுகின்றன. அப்படியானால், ஓராண்டுக்குள் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் திறனை மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் பெறுவார்களா? என்பதை அரசு விளக்க வேண்டும்.
இதற்கெல்லாம் மேலாக ‘நீட்’ தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளியுங்கள் என தமிழக அரசு கோருவதே அடுத்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்பதற்கான உத்தரவாதம் ஆகும்.இதனால் அடுத்த ஆண்டு முதல் தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு திணிக்கப்படும். எனவே, இந்த ஏமாற்று வேலைகளை விடுத்து ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு, மட்டும் நிரந்தர விலக்கு அளிப்பதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.