கொலை மிரட்டல் புகார் தொடர்பாக நடிகர் தாடி பாலாஜி, மனைவியிடம் போலீசார் விசாரணை


கொலை மிரட்டல் புகார் தொடர்பாக நடிகர் தாடி பாலாஜி, மனைவியிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Oct 2017 6:06 AM IST (Updated: 11 Oct 2017 6:06 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவியிடம் கொலை மிரட்டல் புகார் தொடர்பாக வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அம்பத்தூர்,

சென்னை கொளத்தூர் பகுதியில் வசித்துவருபவர் நடிகர் தாடி பாலாஜி. இவர் நடிகர்கள் விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு நண்பராகவும், நகைச்சுவை நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், இவரது மனைவி நித்யாவிற்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் ஒருவர் மீது ஒருவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது மனைவியை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு மனோஜ்குமார் என்பவர் மிரட்டுவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் தாடி பாலாஜி கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார்.

கடந்த 2 நாட்களாக சமூக வலைத்தளங்களில் நடிகர் பாலாஜி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில வீடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

பாலாஜி கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் குறித்து விசாரணை செய்ய வில்லிவாக்கம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணைக்காக நேற்று நடிகர் தாடி பாலாஜி, அவரது மனைவி நித்யா ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் புகார் குறித்து வில்லிவாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமலாரத்தினம் விசாரணை நடத்தினார்.

இன்று (புதன்கிழமை) நடைபெறும் விசாரணையில் மனோஜ்குமார் ஆஜராக வேண்டும் என்று போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.


Next Story