பொறையாறு கட்டிடம் இடிந்து 8 பேர் பலி: அனைத்து அரசு போக்குவரத்து பணிமனைகளையும் ஆய்வு செய்ய வேண்டும்


பொறையாறு கட்டிடம் இடிந்து 8 பேர் பலி:  அனைத்து அரசு போக்குவரத்து பணிமனைகளையும் ஆய்வு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 23 Oct 2017 4:15 AM IST (Updated: 23 Oct 2017 8:33 PM IST)
t-max-icont-min-icon

பொறையாறில் பணிமனை கட்டிடம் இடிந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்த ஐகோர்ட்டு, அனைத்து அரசு போக்குவரத்து கழக பணிமனைகளையும் ஆய்வு செய்ய அரசுக்கு உத்தரவிட்டது.

சென்னை,

நாகை மாவட்டம் பொறையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனை ஓய்வறை கட்டிடம் கடந்த 20–ந் தேதி அதிகாலை இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த 7 டிரைவர்கள், ஒரு கண்டக்டர் உடல்நசுங்கி இறந்தனர். 10–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்சு முன்பு வக்கீல் ஒருவர் முறையீடு செய்தார்.

அப்போது அவர், ‘இந்த கோர விபத்து தொடர்பாக இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பழமையான இந்த கட்டிடத்தால் ஆபத்து என தெரிந்தும் அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர். விபத்துக்கு காரணமான போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்’ என்றார்.

இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையை இலவசமாக அரசு வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளின் உறுதித்தன்மை மற்றும் கட்டமைப்பு வசதிகளை அரசு ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொறையாறு பணிமனை விபத்து தொடர்பாக தமிழக அரசும், அரசு போக்குவரத்து கழகமும் ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.  இந்த வழக்கு விசாரணையை 30–ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


Next Story