என்.எல்.சி. 15 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிடாவிட்டால் பா.ம.க. போராட்டம்
என்.எல்.சி. 15 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிடாவிட்டால் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
என்.எல்.சி. இந்தியா என்று அண்மையில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 15 சதவீதம் பங்குகளை பங்குசந்தை மூலமாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதத் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் என்.எல்.சி. பங்குகளை விற்பது கண்டிக்கத்தக்கது.
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க வேண்டிய தேவையும் இல்லை. நவரத்தினா நிறுவனமான என்.எல்.சி.யின் லாபம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் இந்த நிறுவனம் ரூ.2368.81 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்த லாபத்தில் பெரும்பகுதி மத்திய அரசுக்கு ஈவுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது அதன் 15 சதவீதம் பங்குகளை தனியாருக்கு விற்பது பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமமான செயலாகவே அமையும்.
எனவே, 15 சதவீதம் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயல்வதை அனுமதிக்க முடியாது. மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை எனது தலைமையில் பா.ம.க. நடத்தும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.