ஜெயா டி.வி. அலுவலகத்தில் வருமான வரி சோதனை நிறைவு
ஜெயா டி.வி. அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நேற்றுடன் நிறைவு பெற்றது. அட்டை பெட்டிகளில் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
சென்னை,
வருமான வரித்துறையின் ‘கிளீன் மணி’ ஆபரேஷன் பட்டியலில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகமும் இடம் பெற்றது. இதையடுத்து ஜெயா டி.வி. அலுவலகம் கடந்த 9–ந்தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
ஜெயா டி.வி. பொது மேலாளர் நடராஜன் மற்றும் விளம்பர பிரிவு மேலாளர், மனிதவள மேம்பாட்டு அதிகாரி, கணக்காளர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டவாறு, ஆவணங்களை ஆய்வு செய்தனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, ஜெயா டி.வி. ஊழியர்கள், அதிகாரிகள் வங்கி கணக்கு விபரங்களை தனிக்கவனத்துடன் அலசினர்.
அலுவலகத்தில் உள்ள திரைப்படம் மற்றும் பாடல் சி.டி.க்களில், ஏதேனும் ஆவணங்கள் அடங்கிய சி.டி.க்கள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்தும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ஒரு புறம் நடந்தாலும், ஜெயா டி.வி.யில் நிகழ்ச்சிகளும், செய்திகளும் எந்தவித தடையும் இன்றி ஒளிபரப்பப்பட்டன. ஊழியர்களுக்கு எந்தவித நெருக்கடியையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுக்கவில்லை. அவர்கள் வழக்கம்போல் பணிக்கு வருவதும், போவதுமாக இருந்தனர்.
இந்தநிலையில் ஜெயா டி.வி. அலுவலகத்தில் நேற்று 5–வது நாளாக சோதனை தொடர்ந்தது. அங்கு உள்ள ‘கான்பரன்ஸ்’ அறையில் அதிகாரிகள் குழுவாக அமர்ந்து, ஆலோசனையில் ஈடுபட்டனர். மதியம் 3 மணியளவில் அதிகாரிகள் சோதனையை முடித்துக்கொண்டனர். இதையடுத்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அட்டை பெட்டிகளில் வைத்து காரில் ஏற்றிச் சென்றனர்.
அலுவலகத்தின் நுழைவுவாயிலில் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஆயுதப்படை போலீசாரும் அதிகாரிகளுடன் புறப்பட்டு சென்றனர்.
ஜெயா டி.வி. அலுவலகத்தின் தலைமை செயல் அதிகாரி விவேக்கின் அறையை மட்டும் அதிகாரிகள் சோதனை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. விவேக்கை நேரில் அழைத்து வந்து அவருடைய அறையில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது. இதனால் அவருடைய அறைக்குள் யாரும் சென்று விடாத வகையில் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து விசாரணையை முடித்துவிட்டு கிளம்பிய வருமான வரித்துறை அதிகாரிகளிடம் நிருபர்கள் கேள்வி எழுப்ப முயன்றபோது, அவர்கள் பதில் எதுவும் கூறாமல் காரில் வேகமாக புறப்பட்டு சென்றுவிட்டனர்.