‘11 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்’ ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க. மனு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக 11 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி தி.மு.க. சார்பில் ராஜேஷ் லக்கானியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக காவல் துறையை சேர்ந்த இணை ஆணையர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட பட்டியலை, தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி புகார் கொடுத்து உள்ளோம். பணப்பட்டுவாடாவை தடுக்க சென்ற தேர்தல் பிரிவு அதிகாரிகள் அ.தி.மு.க.வினரால் அடித்து வெளியேற்றப்பட்டார்கள். இதுகுறித்து காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளும் கட்சியினர் அவர்களுடன் கைகோர்த்து செயல்படுகின்றனர். எனவே இந்த அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று கோரி மனு கொடுத்து உள்ளோம்.
துணை ராணுவத்தினர் அதிகம் பேர் வேண்டும் என்று கோரியுள்ளோம். தொகுதியை சுற்றியுள்ள ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர் பகுதிகளிலும் கறி விருந்து அளிக்கப்பட்டு, பணப்பட்டுவாடாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. அதை ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து உள்ளோம். அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து அ.தி.மு.க.வினர் ரூ.55 லட்சத்தை எடுத்திருக்கிறார்கள்.இவ்வளவு பெரிய தொகையை எடுக்க எப்படி அனுமதித்தார்கள். இதுகுறித்து விசாரிக்க வேண்டும். அ.தி.மு.க.வினரும், தினகரன் அணியினரும் போட்டி போட்டுக் கொண்டு பணப்பட்டுவாடா செய்கின்றனர். இதை தடுத்து நிறுத்தாவிட்டால் தேர்தல் நியாயமாக நடக்குமா? என்பது கேள்விக்குறியாகி விட்டது.
தலைமை தேர்தல் அதிகாரியும் தகுந்த நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார். எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்ய இருக்கிறோம். அதேபோல் 45 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க கோரி நீதிமன்றம் சென்றோம்.அதன்படி 5 ஆயிரம் வாக்காளர்களை நீக்காமல் இருந்தார்கள். இதற்காக மற்றொரு வழக்கை தொடர்ந்ததால் 1,947 வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பில் தேர்தல் நடத்தும் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் கூறி உள்ளது. அதன்படி தேர்தல் ஆணையம் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.