போலி வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிட - ஓட்டுப்போட நிரந்தர தடை தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை
போலி வாக்காளர்களை சேர்க்க காரணமான அரசியல்வாதிகளையும், போலி வாக்காளர்களையும் தேர்தலில் போட்டியிடவும், ஓட்டுப் போடவும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள போலி வாக்காளர்கள் முழுமையாக நீக்கப்படவில்லை என்றும், 5 ஆயிரத்து 117 போலி வாக்காளர்கள் உள்ளனர் எனவும், எனவே போலி வாக்காளர்கள் குறித்து ஏற்கனவே தொடர்ந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் கமிஷன் சார்பில் வக்கீல் நிரஞ்சன், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
இரட்டைப்பதிவு, பலமுறை பதிவு, முகவரி மாற்றம், இறப்பு, தொகுதியில் இல்லாதவர்கள் என மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியவர்களில் ஏற்கனவே 2 ஆயிரத்து 220 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது 1,947 இரட்டைப்பதிவு வாக்காளர்கள் மட்டுமே பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தேர்தல் கமிஷன் பதில் அளித்தது.
இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று தி.மு.க. வழக்கு தொடரவில்லை என்றால், போலி வாக்காளர்கள் 45 ஆயிரத்து 836 பேருடன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இருக்கும். இந்த போலி வாக்காளர்களின் பெயர்களை தவிர்த்து, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 ஆகும். அதிலும் 1,947 பேர் நீக்கப்படவில்லை. இந்த தொகுதியில் 45 ஆயிரத்து 836 போலி வாக்காளர்கள் இருந்துள்ளனர். இவையெல்லாம் எங்களுக்கு (நீதிபதிகளுக்கு) அதிர்ச்சியை தருகிறது.ஏன் என்றால், ஒரு ஓட்டு கூட தேர்தலில் வெற்றி, தோல்வியை தீர்மானித்துவிடும். இந்த விஷயத்தில் டிசம்பர் 4–ந் தேதியன்று வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டதால் வாக்காளர் பட்டியலில் இனி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. ஏற்கனவே தொகுதியில் இல்லாதவர்கள், இடம் மாறியவர்கள், இறந்தவர்களின் பட்டியலை தயாரித்து அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பியுள்ளதாகவும், முறைகேடான ஓட்டுப்பதிவை தடுக்க வாக்காளர்களின் கையெழுத்துடன் கைரேகையையும் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலை தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் தேர்தல் கமிஷன் வழங்க வேண்டும். அதுபோல முறைகேடான ஓட்டுப்பதிவை தடுத்து, தேர்தலை ஜனநாயக ரீதியில் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டியது தேர்தல் கமிஷனின் தார்மீகப் பொறுப்பு. அதை தேர்தல் கமிஷன் சரியாக செய்யும் என்று நம்புகிறோம்.மேலும், வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்த்தும், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் இந்த தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் போலியாக வாக்காளர்களை சேர்க்க காரணமாக இருந்த அதிகாரிகள், அரசியல் கட்சியினர் மற்றும் போலி வாக்காளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால், இதுபோன்ற முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.அதாவது, இந்த முறைகேடுக்கு காரணமான போலி வாக்காளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர் நிரந்தரமாக ஓட்டுப்போடவும், தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும். குற்ற வழக்கும் தனியாக பதிவு செய்து, கடும் தண்டனை வழங்கவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், இந்த முறைகேடு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விடும்.
ஜனநாயகத்தின் ஒரே உயிர்நாடி தேர்தல் என்பதால், இந்த தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இந்திய தேர்தல் கமிஷன் நடத்தும் என்று உறுதியாக நம்புகிறோம்.இதற்காக போலி வாக்காளர்கள் குறித்த விவரங்களை, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வழங்கவேண்டும். ஓட்டுச்சாவடியிலும் அந்த விவரங்களை கொடுத்து, போலி வாக்காளர்கள் ஓட்டுப்போடாமல் தடுக்க கடும் நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.