ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா உள்பட 22 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை


ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா உள்பட 22 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை
x
தினத்தந்தி 16 Dec 2017 3:15 AM IST (Updated: 16 Dec 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா உள்பட 22 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று ஜெ.தீபாவின் கணவர் மாதவன் விசாரணை ஆணையத்தில் வலியுறுத்தினார்.

சென்னை,

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் நேற்று 2–வது முறையாக ஆஜரானார். அவரிடம் சுமார் 15 நிமிடம் விசாரணை நடந்தது.

விசாரணையின்போது அவர், ‘‘சசிகலா, அவரது கணவர் நடராஜன், இளவரசி(சசிகலாவின் அண்ணன் மனைவி), திவாகரன்(சசிகலாவின் சகோதரர்), விவேக்(இளவரசியின் மகன்), கிருஷ்ணப்பிரியா, ‌ஷகிலா(இளவரசியின் மகள்கள்), ஜெய் ஆனந்த்(திவாகரனின் மகன்), அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ஷீலாபாலகிருஷ்ணன் உள்பட 22 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதி, ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட வி‌ஷயங்களை மட்டுமே விசாரிக்க முடியும் என்றும், உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துவது ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டு இல்லை என்று கூறி உள்ளார். இதன்பின்பு, இந்த கோரிக்கையை பிரமாண பத்திரமாக மாதவன் ஆணையத்தில் தாக்கல் செய்தார்.

பின்னர் ஆணையத்தில் இருந்து வெளியே வந்த மாதவன் நிருபர்களிடம் கூறியதாவது:–

நான் ஆணையத்தில் ஏற்கனவே அளித்த மனுவில் ஜெயலலிதா மரணம் குறித்து 19 கேள்விகள் கேட்டு இருந்தேன். அந்த கேள்விகள் எல்லாம் பொதுவான கேள்விகளாக இருப்பதாக கூறி அதுகுறித்து ஆணையம் விசாரிக்கவில்லை. ஆணையம் அரசுக்கு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பேன்.

சசிகலா உள்பட 22 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தக்கோரி புதிதாக மனு அளித்துள்ளேன். சாதாரணமாக கேட்டால் அவர்கள் உண்மையை சொல்வார்களா என்று தெரியவில்லை. இதனால்தான் உண்மை கண்டறியும் சோதனைக்கு வலியுறுத்தி உள்ளேன்.

இரவு 10 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெயலலிதா அழைத்து செல்லப்பட்டதாக கூறுகிறார்கள். அந்த சமயத்தில் போயஸ் கார்டனிலும், அப்பல்லோ மருத்துவமனையிலும் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். இதுகுறித்து விசாரிப்பதாக நீதிபதி கூறி உள்ளார்.

உடல்நிலை சரியில்லாதபோது அவசரமாகத்தான் மருத்துவமனைக்கு சென்றிருக்க வேண்டும். அவசரமாக செல்லும்போது கண்காணிப்பு கேமராவை அகற்றிவிட்டு சென்றிருந்தால் ஏதோ சதி நடந்து இருப்பதாகத்தான் கருத வேண்டும்.

ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தபோது தான் கைரேகை பதிவு செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரிக்க வலியுறுத்திய போது அதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் விசாரிக்க இயலாது என்று நீதிபதி கூறி விட்டார். என்னை மீண்டும் ஆஜராகும்படி ஆணையம் கூறவில்லை. ஆணையம் மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராவேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story