அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற அனைவரும் பணியாற்றுவோம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை


அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற அனைவரும் பணியாற்றுவோம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை
x
தினத்தந்தி 17 Jan 2018 3:00 AM IST (Updated: 17 Jan 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை, 

எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் வகையில் நாம் அனைவரும் பணியாற்றுவோம் என்று எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சி தொண்டர்களுக்கு கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் விழாவினை உலகெங்கும் கொண்டாடி மகிழும், அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளும், வணக்கங்களும் உரித்தாகுக.

எம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம்பெற்ற தமிழக மக்களின் நலம் பேணி, எண்ணில்லா அரும் பணிகளை நடைமுறைப்படுத்தும் நல்லாட்சியை தமிழகத்தில் நிலைபெறச் செய்த மகிழ்ச்சியோடு, அவரது பிறந்தநாளை நாம் கொண்டாடி மகிழ்கிறோம். ஜெயலலிதா தன்னுடைய உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் ஓய்வின்றி ஒவ்வொரு நாளும் உழைத்ததன் விளைவாகவும், குறிப்பாக, 2016-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தல் பிரசாரத்தின்போது, தன்னுடைய உடல் நலனைவிட அ.தி.மு.க.வின் வெற்றியே இன்றியமையாதது என்று பாடுபட்டதாலும் கிடைத்த அமோக வெற்றியால் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது.

சூழ்ச்சிகளை முறியடித்து...

ஜெயலலிதாவின் தியாகத்தால் மலர்ந்த இந்த நல்லாட்சியை, அவரது மறைவுக்குப் பிறகு அபகரிக்க சிலரும், கவிழ்த்திட சிலரும் செய்த சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் முறியடித்து, “கட்சியின் நலனே தொண்டர்களின் நலன், கட்சியின் வெற்றியே தொண்டர்களின் வெற்றி; நம்மைவிட கட்சியே பெரியது, கட்சிக்காக வாழ்வதே நமக்குள்ள பெரும் சிறப்பு” என்று ஜெயலலிதா மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியதை மனதில் ஏற்று, அ.தி.மு.க. ஆட்சியை நிலைபெறச் செய்திருக்கிறோம்.

அ.தி.மு.க. வெற்றிக்கு பணியாற்றுவோம்

வேறு எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத பெருமையாக “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று வாழ்ந்த இரு பெரும் தலைவர்களால் பேணி வளர்க்கப்பட்ட இயக்கம் நம்முடைய அ.தி.மு.க. என்னும் பேரியக்கம். இந்த இயக்கம், எம்.ஜி.ஆரிடம் அரசியல் பாடம் பயின்ற ஜெயலலிதாவின் தலைமையில் எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி கட்சித் தொண்டர்களின் நலன்களையும், அவர்களது உணர்வுகளையும் மட்டுமே முன்னிறுத்தி நடைபோட்டதைப் போல, மக்கள் பணி, கட்சியின் உயர்வு, கட்சித் தொண்டர்களின் உணர்வு இவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து நடைபோடும்.

எம்.ஜி.ஆரின் தலைமையிலும், ஜெயலலிதாவின் தலைமையிலும், எப்பொழுதும் கட்டுப்பாட்டோடும், கடமை உணர்வோடும் பணியாற்றி வந்த நாம், அதே உணர்வோடும், கட்டுப்பாட்டோடும் கட்சிப் பணிகளை ஆற்றுவோம். எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் வகையில் நாம் அனைவரும் பணியாற்றுவோம் என்று எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா நேரத்தில் சூளுரை ஏற்போம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். 
1 More update

Next Story