தி.மு.க. தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


தி.மு.க. தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Jan 2018 10:00 PM GMT (Updated: 17 Jan 2018 9:49 PM GMT)

மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையராக மோகன் பியாரே நியமிக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கிற்கு, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயக்கொடி பதவி வகித்து வந்தார். இவரது நியமனத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், திடீரென ஜெயக்கொடி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன் பியாரே என்பவர் ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது சுதந்திரமான, தன்னிச்சையான அமைப்பு ஆகும். தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஆணையராக நியமிக்கக்கூடாது.

சட்டவிரோதம்

தமிழக அரசின் ஆலோசனையின்பேரில் கவர்னர் தான் ஆணையரை நியமிக்க வேண்டும். ஆனால் நில நிர்வாக ஆணையராக பதவி வகித்து வந்த மோகன் பியாரே, ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பது சட்டவிரோதம். ஏற்கனவே குட்கா ஊழல் தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது அதிகாரி ஜெயக்கொடி மாற்றப்பட்டு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மோகன் பியாரேவின் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

பதில் அளிக்க உத்தரவு

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘எந்தவொரு விதிகளையும் பின்பற்றாமல் மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு மோகன் பியாரே நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த சட்டவிரோத நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து, ‘இந்த மனுவுக்கு, தமிழக அரசு வருகிற 24-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை 29-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். 

Next Story