மீனவர்கள் மீட்பு நடவடிக்கை; கனிமொழிக்கு நன்றி தெரிவித்த மீனவர்கள்


மீனவர்கள் மீட்பு நடவடிக்கை; கனிமொழிக்கு நன்றி தெரிவித்த மீனவர்கள்
x
தினத்தந்தி 2 Nov 2019 5:26 PM IST (Updated: 2 Nov 2019 5:26 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியைச் சேர்ந்த 38 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொண்டதற்காக தூத்துக்குடி எம்.பி. கனிமொழியை மீனவர்கள் பிரதிநிதிகள் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்திலிருந்து கடந்த மாதம் 13, 16, 18, 23 ஆகிய தேதிகளில் மொத்தம் 38 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் கடலுக்குச் சென்று சில நாட்கள் தங்கி இருந்து மீன் பிடிப்பது வழக்கமாகும்.

இந்நிலையில் புயல் உருவாகியுள்ளதால் மீனவர்கள் அனைவரும் கரை திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடலுக்குச் சென்ற 38 மீனவர்களையும் தொடர்புகொள்ள முயன்றபோது அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக தெரிய வந்தது.

இதனையடுத்து கடலுக்குச் சென்ற மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி ஆகியோரிடம் மீனவர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கனிமொழி இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்ததை தொடர்ந்து 38 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதற்காக இன்று கனிமொழியை சந்தித்த மீனவர்களின் உறவினர்கள் மீட்பு நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, "உள்துறை அமைச்சகத்திடம் மீனவர்களை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். அவர்களும் கடலோர காவல் படையினருடன் இணைந்து மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

மேலும், தூத்துக்குடியில் பல பகுதிகளில் நீர்வழித் தடங்களை தூர்வாரும் பலகை மட்டுமே உள்ளதாகவும் தூர்வாராததால் மழை நீர் வீணாவதாகவும் குற்றம் சாட்டினார்.

Next Story