திமுக வெற்றியை மாற்றி அறிவிக்க முயற்சி நடைபெறுகிறது -மு.க.ஸ்டாலின் பேட்டி
திமுக வெற்றியை மாற்றி அறிவிக்க முயற்சி நடைபெறுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் சத்யநாராயணா, ஹேமலதா அமர்வு அவசர வழக்காக இன்று விசாரித்தது. வழக்கு விசாரணையின் போது, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுவதால் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
விசாரணையின் முடிவில் விதிகளை பின்பற்றியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பதை எழுத்துப்பூர்வமாக நாளை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;-
“திமுக வெற்றியை மாற்றி அறிவிக்க முயற்சி நடைபெறுகிறது. திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்த அதிமுக அரசு முயற்சிக்கிறது. திமுக அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பல பகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பின்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இங்கு ஜனநாயக படுகொலை நடக்கிறது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தர்ணாவில் ஈடுபடுவோம்” என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story