அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் - கவர்னரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புகார்

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பதவியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என்று கவர்னரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்துள்ளனர்.
சென்னை,
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சமீபத்தில் தனி யார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது, தி.மு.க. குறித்தும், மதச்சார்பின்மை மற்றும் பயங்கரவாதம் குறித்தும் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறியதாக தெரிகிறது. இது தி.மு.க.வினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து ராஜேந்திரபாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என்று கவர்னருக்கும், அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி.க்கும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் புகார் கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தை புகார் மனுவாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன் ஆகியோர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளரிடம் சென்னை ராஜ்பவனில் நேற்று நேரில் சந்தித்து கொடுத்தனர். இதேபோல போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திலும் புகார் கொடுத்தார்கள்.
அந்த புகார் மனுவில், ‘அரசியலமைப்பு சட்டப்படி பதவிப்பிரமாணம் எடுத்த ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுவதுடன், மக்களை மதரீதியாக துண்டாடும் வகையில் பேசியிருக்கிறார். எனவே அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதோடு, அவர் மீது சட்டரீதி யாகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story