‘சியட்’ டயர் தொழிற்சாலை தொடக்க விழா: ‘ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் சக்தியாக தமிழ்நாடு இருக்கிறது’ - எடப்பாடி பழனிசாமி பெருமிதம்


‘சியட்’ டயர் தொழிற்சாலை தொடக்க விழா: ‘ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் சக்தியாக தமிழ்நாடு இருக்கிறது’ - எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
x
தினத்தந்தி 12 Feb 2020 11:30 PM GMT (Updated: 2020-02-13T04:45:15+05:30)

ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாபெரும் சக்தியாக தமிழ்நாடு இருக்கிறது என்று ‘சியட்’ டயர் தொழிற்சாலை தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கண்ணன்தாங்கல் கிராமத்தில் சுமார் 165 ஏக்கரில் ‘சியட்’ நிறுவனத்தின் புதிய டயர் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ரூ.4 ஆயிரம் கோடியில் இந்த தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆலை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த டயர் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அப்போது தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், ‘சியட்’ லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆனந்த் கோயங்கோ ஆகியோர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இந்த தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி எனது முன்னிலையில் போடப்பட்டது. ஒப்பந்தம் போட்ட 18 மாதங்களில் உத்தரவாதம் அளித்த மொத்த முதலீடான ரூ.4 ஆயிரம் கோடியில், முதற்கட்டமாக ரூ.1,400 கோடி முதலீடு செய்து முழு அளவிலான வணிக உற்பத்தியை சியட் நிறுவனம் தொடங்கி இருக்கிறது.

மிக விரைவாக செயல்பட்டு தனது உற்பத்தியை தொடங்கிய இந்த நிறுவனத்துக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைமையகமாக விளங்கும் தமிழ்நாடு, டயர் உற்பத்தியிலும் முதலிடம் பெற்றுள்ளது. இருசக்கர வாகனங்கள் முதல் போர் விமானங்கள் வரை அனைத்து வகை பயன்பாட்டிற்குமான டயர்களும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே பகிர்ந்துகொள்கின்றேன்.

இந்தியாவின் 40 சதவீத டயர் உற்பத்தி தமிழ்நாட்டில் தான் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மணிமகுடத்தில், மேலும் ஒரு மாணிக்கமாக இந்த தொழிற்சாலை அமைந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். ‘சியட்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் தான் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவரும் அனைத்து திட்டங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்பதை நான் பெருமையுடன் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் பச்சை வகைப்பாடு என்று வகைப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சாலைகள், தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், அதிக வேலைவாய்ப்பு வழங்கும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்க, சிறப்பான சலுகைகளை ஜெயலலிதாவின் அரசு வழங்கி வருகிறது.

தற்போது டயர் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றான ‘சிந்தட்டிக்’ ரப்பரை மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றன. பெட்ரோகெமிக்கல் ஆலைகள் தமிழ்நாட்டில் உருவாவதன் மூலம், டயர் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் குறைவான விலையில் இங்கேயே கிடைக்கக்கூடிய நல்ல சூழல் உருவாகும். இதனால் உற்பத்தி செலவு குறைவதோடு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

தொலைநோக்கு பார்வையுடன் ஜெயலலிதாவின் அரசு எடுத்துவரும் இது போன்ற நடவடிக்கைகளால், ஆடை உற்பத்தி முதல் மருத்துவ உபகரணங்கள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் என பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் மாறி, வணிக சங்கிலியின் அனைத்து படிநிலைகளும் தமிழ்நாட்டிலேயே அமையும் சூழல் ஏற்பட்டு, ஏராளமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களை உருவாக்கி பல லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை இன்றைக்கு தமிழகம் உருவாக்கி கொண்டு இருக்கிறது.

ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாபெரும் சக்தி உடைய ஒரு மாநிலம் என்று சொன்னால், தமிழ்நாடு தான் என்று இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன். சில மாநிலங்கள் சமூக வளர்ச்சி குறியீடுகளில் முன்னிலை வகிக்கின்றன. சில மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கின்றன.

ஆனால், சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி என துறைகள்தோறும் சிறப்பிடம் பெற்று, அனைவருக்குமான வளர்ச்சியை தொடர்ந்து உறுதி செய்யும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். சியட் நிறுவனம், தனது உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியதை போல, விரைவில் தனது ஆராய்ச்சி பிரிவையும் சென்னையில் தொடங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் கார் டயர் உற்பத்தி செய்யப்படும் என்றும், இங்கு பணிபுரிகின்றவர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் என்றும் சியட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆனந்த் கோயங்கோ தெரிவித்தார். இந்த தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு வழங்கும்.

இந்த தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீர் கொண்டு வருவதற்கான உதவியை செய்ய வேண்டுமென்று இங்கே மேடையில் ஆனந்த் கோயங்கோ என்னை கேட்டுக்கொண்டார். தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீர் கொண்டு வருவதற்கு எங்களுடைய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். தமிழ்நாட்டில் தொழில் தொடங்கக்கூடிய அனைத்து தொழிற்சாலைகளுக்கும் எங்களுடைய அரசு முன்னிருந்து அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story