அ.தி.மு.க. அரசு சொல்வது ஒன்று, செய்வது வேறு: தமிழகத்தில், 3 ஆண்டுகளில் 2 ஆயிரம் புதிய மதுக்கடைகள் - மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு


அ.தி.மு.க. அரசு சொல்வது ஒன்று, செய்வது வேறு: தமிழகத்தில், 3 ஆண்டுகளில் 2 ஆயிரம் புதிய மதுக்கடைகள் - மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
x
தினத்தந்தி 13 Feb 2020 11:15 PM GMT (Updated: 2020-02-14T04:26:34+05:30)

‘தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரம் புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன’, என்றும், ‘அ.தி.மு.க. அரசு சொல்வது ஒன்று, செய்வது வேறு’, ஆக உள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ‘டைமண்ட் பிரின்சஸ்’ கப்பலில் வந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்தநிலையில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தனது ‘டுவிட்டர்’ பதிவில், ‘ஜப்பான் யொகோகாமா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள பயணிகள் மற்றும் குழுவினருடன் டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகம் இடைவிடாத தொடர்பில் உள்ளது. இந்தியப் பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவி மற்றும் ஆதரவும் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது கப்பலில் உள்ள பயணிகள் மற்றும் ஊழியர்கள் ஜப்பான் அதிகாரிகளால் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்’, என தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் தனது ‘டுவிட்டர்’ பதிவில், ‘தற்போதைய நிலவரம் குறித்து தகவல் தெரிவித்துள்ள மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு நன்றி. நமது தூதரக அதிகாரிகள் கப்பலில் உள்ள (இந்திய) பயணிகள் மற்றும் ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட-மருத்துவ உதவிகளையும் செய்வதுடன், கப்பலில் உள்ளவர்களது குடும்பத்தினருக்குத் தொடர்ந்து நிலைமையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது தகவல் தெரிவிப்பார்கள் என்றும் நம்புகிறோம்’, என தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில், ‘கடந்த 3 ஆண்டில் 2 ஆயிரத்துக்கும் மேலான டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று செய்வது வேறு என அ.தி.மு.க. போட்டு வரும் இரட்டை வேடம் இது’, என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story