சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் மேலும் 2 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொரோனா


சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் மேலும் 2 சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 July 2020 2:45 AM IST (Updated: 25 July 2020 1:59 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.

மதுரை, 

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீ ஸ் காவலில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ. ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையில் சச்சின், அனுராக்சிங், பவன்குமார்திவேதி, சைலேஷ்குமார், சுஷில்குமார்வர்மா, அஜய்குமார், பூனம்குமார் ஆகிய 8 பேர் கொண்ட அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 10 போலீசாரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் அழைத்துச் சென்றும் விசாரித்தனர்.

இதற்கிடையே காவலில் எடுக்கப்பட்ட போலீசாருக்கும், அவர்களிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், சி.பி.ஐ. விசாரணை குழுவில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் சச்சின் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து இருவரும் ஏற்கனவே மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை தொடர்ந்து, சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீசாருக்கும், சி.பி.ஐ. அதிகாரிகள் மற்ற 6 பேருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று காலை வெளிவந்தன. அதில் சி.பி.ஐ. குழுவில் இடம் பெற்றிருந்த பவன்குமார்திவேதி, அஜய்குமார் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்களும் மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே போல் சாத்தான்குளம் வழக்கில் 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரைக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து அவரை சிறை நிர்வாகம் தனிமைப்படுத்தி, மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். சிறையில் இருந்த அவருக்கு எப்படி கொரோனா பரவியது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே விசாரணை குழுவில் இடம் பெற்றிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட மதுரை ஆத்திக்குளத்தில் அமைந்துள்ள சி.பி.ஐ. அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 2 நாட்கள் அலுவலகத்தை மூடி வைக்குமாறு மதுரை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களாக பரபரப்பாக இயங்கி வந்த சி.பி.ஐ. அலுவலகம் நேற்று அமைதியாக காணப்பட்டது. மேலும் சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக விசாரணை நடந்த அறைகள் மற்றும் அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கியிருந்த 4 அறைகளும் பூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story