சுதந்திர தின விழாவில் இன்ஸ்பெக்டரை மேடைஏற்றி மரியாதை செய்த கலெக்டர்


சுதந்திர தின விழாவில் இன்ஸ்பெக்டரை மேடைஏற்றி மரியாதை செய்த கலெக்டர்
x
தினத்தந்தி 17 Aug 2020 3:39 AM IST (Updated: 17 Aug 2020 3:39 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தின விழாவில் இன்ஸ்பெக்டரை மேடைஏற்றி கலெக்டர் மரியாதை செய்தார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் சுதந்திர தினவிழா நடந்தது. இதில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு கலெக்டர் பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்களை வழங்கினார். அப்போது காவல்துறையைச் சேர்ந்த 30 பேருக்கு கலெக்டர் வழங்கினார். அதில் தெள்ளார் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும் அல்லிராணி என்பவருக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம், பதக்கத்தை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் திடீரென கலெக்டர் விழா மேடையில் இருந்து கீழே இறங்கி, அவர் நின்றிருந்த இடத்தில் அல்லிராணியை நிற்க சொன்னார். அதேபோல் அல்லிராணியும் கலெக்டர் கூறியதால் அந்த இடத்தில் நின்றார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கலெக்டர் கந்தசாமி அல்லிராணிக்கு ‘சல்யூட்’ அடித்து மரியாதைச் செய்தார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களுக்கு வியப்பாக இருந்தது.

இதுகுறித்து விசாரித்தபோது, இன்ஸ்பெக்டர் அல்லிராணி கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏரிப்பட்டு கிராமத்தில் அமாவாசை என்பவர் மின்வேலியில் சிக்கி இறந்தார். அவர், கொரோனாவுக்கு இறந்ததாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரின் உடலை தூக்க மறுத்தனர். இதனால் அல்லிராணி களத்தில் இறங்கி, இறந்த அமாவாசையின் உடலை தூக்கி அப்புறப்படுத்தினார். இதற்காக, அவருக்கு கலெக்டர் மரியாதை செலுத்தினார், எனத் தெரிய வந்தது. அல்லிராணி ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 More update

Next Story