நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Nov 2020 5:30 AM IST (Updated: 18 Nov 2020 1:15 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு தனித்தேர்வு நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

“மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு இந்தியா முழுவதும் ஒரே ‘நீட்’ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது” என்று ஐகோர்ட்டுகளிலும், சுப்ரீம் கோர்ட்டிலும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் என்ற பாணியில் மிகவும் பிடிவாதமாக வாதிட்டு, தமிழக மாணவர்களுக்கு மறக்க முடியாத மாபெரும் துரோகம் செய்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது “தேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் தனி நுழைவுத்தேர்வு” என்று அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு நிம்ஹான்ஸ், சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர். போன்ற 11 கல்லூரிகளில், 2021-ல் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தனி நுழைவுத்தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டு, தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கு சித்தூரில் தேர்வு மையங்களை ஒதுக்கி அடாவடியாக குழப்பங்களைச் செய்து கொண்டிருப்பது அநீதியின் உச்சக்கட்டமாகும். பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.2 ஆயிரம் செலுத்தவேண்டும். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பு மாணவர்கள் ரூ.1,500 செலுத்தினாலே போதும் என்று இன்னொரு ஒரு பேதமும், துரோகமும் இழைக்கப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்

மத்திய அரசின் கீழ் உள்ள 11 மருத்துவ கல்லூரிகளுக்கு தனித்தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்று மத்திய பா.ஜ.க. அரசு இப்போது அனுமதி வழங்கிவிட்டதால், நாடு முழுவதும் ஒரே தேர்வு என்று அறிமுகப்படுத்திய ‘நீட்’ தேர்வினை உடனடியாக ரத்து செய்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ‘நீட்’ தேர்வு இல்லாமலேயே முதுநிலை மருத்துவ கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்திடவும், அந்த மாணவர் சேர்க்கை தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெற்றிடவும் அனுமதித்திட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இந்த 11 மத்திய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளை மனதில் கொண்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதி, உரிய அழுத்தம் கொடுத்து, தமிழகத்திலும் ‘நீட்’ தேர்வு இன்றி முதுநிலை மருத்துவ கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்கவும், அதில் தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டினை செயல்படுத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

உயர் சிறப்பு படிப்புகள்

இதுதவிர, தமிழகத்திலுள்ள 584 மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளுக்கான இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு போராடி பெற்ற 50 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு இதுவரை கலந்தாய்வு நடத்தாமல் அ.தி.மு.க. அரசு காலம் கடத்துவது கவலை அளிக்கிறது. இந்த இடஒதுக்கீட்டிற்கான அரசாணை 7-11-2020 அன்றே வெளியிடப்பட்ட பிறகும் இன்னும் அ.தி.மு.க. அரசு யாருக்காக பயந்து கவுன்சிலிங்கை நடத்தாமல் இருக்கிறது?.

ஆகவே இந்த அரசாணையை உடனடியாக செயல்படுத்தி அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளில் 50 சதவீத உள் இடஒதுக்கீட்டை தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டு கொள்கை அடிப்படையில் வழங்கிட முதல்-அமைச்சர் உடனடியாக கலந்தாய்வை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story