ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி கூடுதலாக விநியோகம்: தமிழக அரசு அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 Jun 2021 4:58 PM GMT (Updated: 2021-06-08T22:28:05+05:30)

மத்திய அரசு ஒதுக்கியுள்ள அரிசி ஜூன் மாதத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு கூடுதலாக விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை, 

ஒன்றிய அரசின் கூடுதல் அரிசியும் சேர்த்து, அரிசி குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்ப, ஜூன் மாதத்தில் மொத்தமாக விநியோகிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் 18.64 லட்சம் அந்தியோதயா அன்ன யோஜனா பிரிவுக்கு மாதம்தோறும் அதிகபட்சம் 35 கிலோவும், 93 லட்சம் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு தலா 5 கிலோவும், எஞ்சிய முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசியும் வழங்கப்படுகின்றன.

அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தேவைக்கேற்ப, புழுங்கல் அரிசி, பச்சரிசி என வாங்கி கொள்ளலாம்.கொரோனா பரவலின் இரண்டாம் அலையால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மே மற்றும் ஜுன் மாதங்களில், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்படும் உரிம அளவுடன் நபர் ஒருவருக்கு கூடுதலாக தலா 5 கிலோ தானியங்களை விலையில்லாமல் வழங்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு கூடுதலாக அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமின்றி, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களையும் சேர்த்து கூடுதல் அரிசி வழங்கி வருகிறது. உதாரணமாக, ஈரலகு உள்ள குடும்பத்திற்கு 20 கிலோ, 3 அலகு உள்ள குடும்பத்திற்கு 30 கிலோ என்ற அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்படும் உரிம அளவுடன் சேர்த்து, இரு மடங்கு அரிசி கிடைக்கும்.

மே மாதம் வழங்க வேண்டிய இந்த கூடுதல் அரிசி விநியோகம் அடுத்த மாதம் (ஜூலை, 2021) சேர்த்து வழங்கப்படும். எனவே, ஒன்றிய அரசின் கூடுதல் அரிசியும் சேர்த்து, அரிசி குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்ப, ஜூன் மாதத்தில் மொத்தமாக விநியோகிக்கப்படும் அரிசி விவரங்கள் நியாயவிலைக் கடைகளில் உள்ள விளம்பரப்பலகைகளில் விளம்பரப்படுத்தப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story