தமிழகத்தில் பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடங்குமா? - மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்


தமிழகத்தில் பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடங்குமா? - மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்
x
தினத்தந்தி 19 Jun 2021 10:28 PM GMT (Updated: 2021-06-20T07:26:07+05:30)

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்ததாக ஊரடங்கு உத்தரவில் என்னென்ன தளர்வுகளை அளிக்கலாம் என்பது பற்றி மருத்துவ குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்குமா என்பது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகிறது.

ஊரடங்கு நீட்டிப்பு
இதன்காரணமாக தொற்று குறைந்தது. எனவே மேலும் ஒரு வாரம் அதாவது, மே31-ந்தேதியில் இருந்து ஜூன் 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.இதில் நல்ல பலன் கிடைத்ததால் தொடர்ந்து 7-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரையிலும், பின்னர் 14-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி (நாளை) வரையிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு தொற்றின் எண்ணிக்கை 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்து, அடுத்தடுத்து 4 முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் மூலம் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து நாளொன்றுக்கு 8 ஆயிரம் என்ற விகிதத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு முறை ஊரடங்கு நீட்டிப்பு செய்யும்போதும் சில தளர்வுகளையும் அரசு அறிவித்து வருகிறது.

ஆலோசனை கூட்டம்
அடுத்ததாக 5-வது முறையாக நாளை முதல் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதற்காகவும், அதில் என்னென்ன தளர்வுகளை மேற்கொள்ளலாம்? என்றும் ஆலோசிப்பதற்காக மருத்துவ நிபுணர் குழு மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.40 மணிக்கு முடிவடைந்தது.

பங்கேற்றோர்
இந்த கூட்டத்தில்சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கிருஷ்ணன், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் பல மருத்துவத்துறை அதிகாரிகள்,பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், முதுநிலை மண்டலக் குழு தலைவர் டாக்டர் கே.என்.அருண்குமார், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இயக்குனர் டாக்டர் ஜெ.வி.பீட்டர்,இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானியும், தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குனருமான டாக்டர் பிரதீப் கவுர், இந்திய மருத்துவ 
சங்கத்தலைவர் டாக்டர் பி.ராமகிருஷ்ணன், பொது சுகாதார ஆலோசகர் டாக்டர் பி.குகன்நாதன், அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தொற்று நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் வி.ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

பஸ் போக்குவரத்து
கூட்டத்தில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் கொரோனா 3-வது அலையின் தாக்கம் பற்றியும் அதை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.மேலும், தற்போதுள்ள தொற்றின் நிலை, மேலும் தளர்வுகளை அளிப்பது, கடைகள் திறக்கப்படும் நேரத்தை அதிகரிப்பது, மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்தை அனுமதிப்பது, ‘மால்’கள் அல்லாமல் ஜவுளிக்கடை போன்ற சில பெரிய கடைகளை ஏ.சி. இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அனுமதிப்பது, அரசு அலுவலகங்களில் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இன்று அறிவிப்பு
கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தொற்று குறைந்து வரும் மாவட்டங்களை தேர்வு செய்து அங்கும் பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அனுமதிக்கலாம் என்று கருத்து கூறப்பட்டது.இந்த கூட்டத்தில் எடுத்துள்ள முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு உத்தரவு பற்றிய அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறப்பிக்கிறார்.

தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடங்குவது குறித்த அறிவிப்பு இதில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story