வேளாண்மைக்கு தனி பட்ஜெட் உழவர் சந்தைக்கு புத்துயிர் அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கவர்னர் உரையில் அறிவிப்பு


வேளாண்மைக்கு தனி பட்ஜெட் உழவர் சந்தைக்கு புத்துயிர் அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கவர்னர் உரையில் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2021 11:26 PM GMT (Updated: 21 Jun 2021 11:26 PM GMT)

வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போடப்படும் என்றும், அரசு வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தமிழக சட்டசபையில் கவர்னர் அறிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த 16-வது சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில், புதிய சட்டசபையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

தமிழில் பேசிய கவர்னர்

தி.மு.க. அரசின் முதல் கூட்டம் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். இதற்காக அவர் சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் இருந்து கலைவாணர் அரங்கத்திற்கு காலை 9.55 மணிக்கு காரில் வந்து இறங்கினார். அவரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டிலும் உடன் வந்தார்.

அதன் பின்னர், சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு காலை 9.59 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை அழைத்து வந்தனர். சபாநாயகர் இருக்கைக்கு அவர் வந்ததும், அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். அவருக்கு வலது புறம் போடப்பட்டிருந்த இருக்கையில் சபாநாயகர் அப்பாவுவும், இடதுபுறம் போடப்பட்டிருந்த இருக்கையில் கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டிலும் அமர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது, அனைவரும் எழுந்து நின்றனர். சரியாக, காலை 10.02 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசத் தொடங்கினார். முதலில் சில வார்த்தைகள் தமிழில் பேசினார். அப்போது, “காலை வணக்கம். எளிமையான வாழ்க்கை வாழுங்கள். அது ஊழலை அகற்றிவிடும். இது எனது செய்தி. தமிழ் இனிமையான மொழி” என்றார்.

பொது நிவாரண நிதி

அதன்பின்னர், தனது உரையை ஆங்கிலத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.335.01 கோடி நிதியுதவி பல்வேறு தரப்பில் இருந்து குவிந்துள்ளது. இத்தொகையில், ரூ.141.10 கோடி உடனடியாகவும், வெளிப்படையாகவும், உயிர்காக்கும் மருந்துகளையும், கருவிகளையும் கொள்முதல் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்குவதற்காக ரூ.50 கோடியும், கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு ரூ.50 கோடியும் ஒதுக்கப்படும்.

பெருந்தொற்று பரவல் சூழலில் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும், வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்பதையும் உணர்ந்துள்ள இந்த அரசு, மாநிலத்திலுள்ள 2.1 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணத்தொகையை 2 தவணைகளாக மொத்தம் ரூ.8,393 கோடி நிதியுதவியை மே, ஜூன் மாதங்களில் வழங்கியுள்ளது.

ரூ.10,068 கோடி வாழ்வாதார உதவி

இதுதவிர, ரூ.466 மதிப்பிலான 14 வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளும், ரூ.977.11 கோடி செலவில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மே, ஜூன் மாதங்களுக்கு, மாநிலத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், மாநில அரசிற்கு கூடுதலாக ரூ.687.84 கோடி செலவு ஏற்படும்.

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை மனதிற்கொண்டு செயல்படும் இந்த அரசு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவியாக மொத்தம் ரூ.10,068 கோடியை இந்த அரசு பதவி ஏற்றது முதல் வழங்கியுள்ளது.

ரூ.250 கோடியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை

சென்னை கிங் மருத்துவமனை வளாகத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளைக் கொண்ட புதிய பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது.

அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை பெருமளவில் பாதிக்கக்கூடிய எண்ணற்ற அரசு வழக்குகள் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன. அனைத்து வழக்குகளுக்கும் விரைவாக தீர்வு காண்பதற்கும், உரிய காலகட்டத்தில் முடிவு எட்டப்படும் வரை, அரசு ஒரு தரப்பாக உள்ள வழக்குகளை முனைப்புடன் கண்காணிப்பதற்கும், புதிய மேலாண்மை அமைப்புகளையும், நடைமுறைகளையும் இந்த அரசு உருவாக்கும்.

63,500 மனுக்களுக்கு தீர்வு

பரிவுள்ள ஆளுமை என்பது இந்த அரசின் முக்கிய கோட்பாடாகும். ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் 100 நாட்களுக்குள் தீர்வு காண்பதற்காக, முதல்-அமைச்சர் ஏற்கனவே சிறப்பு அலுவலர் ஒருவரை நியமித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில், பெருந்தொற்று பரவல் காலத்திலும், இதுவரை 63,500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மின் ஆளுகையை ஊக்குவித்து, இணையவழி மூலம் அரசு சேவைகளைப் பெறுவதற்கான வழிகளை உயர்த்தி, வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புடைமையையும் உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். ‘எங்கும் எப்போதும் அரசு சேவைகளை’ பொதுமக்கள் இணையவழி வாயிலாக உடனுக்குடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

லோக் ஆயுக்தா அமைப்புக்கு புத்துயிர்

பொதுமக்களுக்கு இயற்கைப் பேரிடர் தொடர்பான செய்திகளையும், எச்சரிக்கைத் தகவல்களையும் சரியான நேரத்தில் தெரிவிப்பதற்காக, புதிய தொழில்நுட்ப சேவைகள் வழங்கப்படும். அரசுசாரா அமைப்புகள் உள்பட சுற்றுப்புறத்தில் உள்ள முதலில் உதவக்கூடியவர்களுக்கு, பேரிடர் காலத்தில் ஆரம்பக்கட்ட மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான பயிற்சி அளிக்கப்படும். மேலும், பேரிடர் மீட்புப் பணிகளுடனும் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்களின் செயல்பாடுகளுடன் அவர்களின் செயல்பாடு ஒருங்கிணைக்கப்படும்.

தூய்மையான நிர்வாகத்தை உறுதிசெய்வதே இந்த அரசின் முன்னுரிமை ஆகும். மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதான புகார்களையும் விசாரிக்க, லோக் ஆயுக்தா அமைப்பிற்கு புத்துயிரும், உரிய அதிகாரமும் அளிக்கப்படும். ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புப்பணி ஆணையரகம் முடுக்கிவிடப்பட்டு, நிலுவையிலுள்ள புகார்கள் மீது விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும். பல்வேறு அரசு அமைப்புகளால் வழங்கப்படும் பொதுச்சேவைகளை முறைப்படுத்திட ‘சேவைகள் உரிமைச் சட்டம்’ அறிமுகப்படுத்தப்படும்.

அடுத்த மாதம் வெள்ளை அறிக்கை

மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன்சுமையை குறைக்கவும், நிதிநிலையை மேம்படுத்தவும் இந்த அரசு முழுக்கவனம் செலுத்தும். இதன் முதல் கட்டமாக, தமிழ்நாட்டின் நிதிநிலையின் தற்போதைய உண்மையான நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை ஒன்று ஜூலை மாதத்தில் (அடுத்த மாதம்) வெளியிடப்படும். இதன்மூலம், தமிழ்நாட்டு மக்களுக்கு மாநில நிதிநிலையின் விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படும்.

வேளாண்மைக்கு தனி பட்ஜெட்

நம் நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளின் முக்கியத்துவத்தைப் போற்றும் வகையில், இந்த அரசு, வேளாண்மைத்துறையை, ‘வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை’ என பெயர் மாற்றம் செய்துள்ளது. விவசாய உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் நலச் சங்கங்கள், வல்லுநர்களின் முனைப்பான பங்களிப்புடன் கூடிய புதிய தொழில்நுட்பங்கள், பயிரிடுவதற்கான புதிய முறைகள், வேளாண்மை நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும்.

விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதற்காக, கால்நடைப் பராமரிப்பு, இயற்கை வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிடுதல் போன்ற வேளாண் தொடர்புடைய செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படும். வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், ஆண்டுதோறும் வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

உழவர் சந்தைக்கு புத்துயிர்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் அத்தகைய உழவர் சந்தைகள் அமைக்கப்படும். விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக, அரசின் மேற்பார்வையில் கிராமப்புறச் சந்தைகள் உருவாக்கப்படும். 2021-22-ம் ஆண்டில், 125 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி என்ற இலக்கினை அடைய இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க, இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்கு எதிராக, கர்நாடக அரசால் திட்டமிடப்பட்டுள்ள மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று மத்திய அரசை இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

கேரள அரசுடன் பேச்சுவார்த்தை

முல்லைப் பெரியாறு அணையினை வலுப்படுத்தும் எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ளத் தேவையான அனுமதிகளை விரைந்து வழங்குமாறு கேரள அரசையும், மத்திய அரசையும் இந்த அரசு கேட்டுக்கொள்ளும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், 9-ந்தேதி அன்று, திருச்சி-கரூர் இடையே மாயனூரில் காவிரி நதியின் குறுக்கே கட்டளை கதவணை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி, காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

அத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டப் பணிகளை முடித்திட இந்த அரசு உறுதியாக உள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தின் கீழ், இடைமலையாறு அணை கட்டுமானத்தை கேரள அரசு நிறைவு செய்துள்ளதையடுத்து, அதன் தொடர்ச்சியாக, ஆனைமலையாறு அணை கட்டுவதற்காக கேரள அரசுடன் இந்த அரசு பேச்சுவார்த்தையை தொடங்கும்.

கச்சத்தீவை மீட்க தொடர்ந்து அழுத்தம்

கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது உள்பட நமது மீனவர் சமூகத்தின் நலன்களை இந்த அரசு பாதுகாக்கும். இலங்கை கடற்படையினரால் பலமுறை தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, உயிரிழப்பு ஏற்படுவது போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண, மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்தும். கடல்சார் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் அனைத்து நலன்களையும் பாதுகாப்பதற்காக, மீனவர்கள் நலனிற்கான தேசிய ஆணையத்தை அமைக்குமாறு மத்திய அரசிடம் இந்த அரசு கோரும்.

2016-ம் ஆண்டில் நடைபெறவிருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள், 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறவில்லை. முன்னர் மேற்கொள்ளப்பட்ட எல்லை வரைவு, அனைத்து வகையிலும் முறையாக இருப்பதை உறுதி செய்த பின்னர், கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்தவுடன், இந்த தேர்தல்களை நடத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சிங்காரச் சென்னை 2.0

மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைப்பதற்காக புறநகர்ப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும். மாநிலம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் மண்டலம் வாரியான திட்டங்கள் வகுக்கப்படும். அனைத்துத் தரப்பினருடனும் உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு, சென்னைக்கான 3-வது பெருந்திட்டத்தை தயாரிக்கும் உரிய காலமான 2026-ம் ஆண்டிற்கு முன்னரே அப்பணி முடிக்கப்படும்.

சென்னைக்கு அருகில் இருந்த 42 உள்ளாட்சி அமைப்புகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து, மாநகர எல்லைகள் விரிவாக்கப்பட்டன. இணைக்கப்பட்ட பகுதிகளின் அடிப்படைக் கட்டமைப்புகளில் இன்னும் உரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, இணைக்கப்பட்ட பகுதிகளில் இந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். முதல்-அமைச்சர் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, சென்னை மாநகரத்தை ‘சிங்காரச் சென்னையாக’ மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த வகையில், சென்னையில் மாநகரக் கட்டமைப்பை நவீன சர்வதேசத் தரத்திற்கு உயர்த்திடும் வகையில், ‘சிங்காரச் சென்னை 2.0’ எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

உயர்மட்ட சாலை பணிகள்

கடந்த ஆண்டுகளில், காரணமின்றி நிறுத்திவைக்கப்பட்ட மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான உயர்மட்டச் சாலைத் திட்டப்பணிகளை விரைவுபடுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் விரைவாக நிறைவேற்றப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும். இத்திட்டத்தின் முதல் கட்டத்தைப் போலவே, 50:50 என்ற செலவுப் பகிர்வு அடிப்படையில், மத்திய அரசு தங்களுடைய பங்கு மூலதனத்திற்கு ஒப்புதலை விரைவாக வழங்க வேண்டும் என்று இந்த அரசு வலியுறுத்தும்.

மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெருந்திரள் விரைவு போக்குவரத்து அமைப்புகளுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

அரசு வேலையில் முன்னுரிமை

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் இந்த அரசு வலியுறுத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

52 நிமிடங்கள் பேசினார்

சரியாக காலை 10.02 மணிக்கு பேச்சை தொடங்கிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் 10.54 மணிக்கு, 52 நிமிடத்தில் தனது பேச்சை நிறைவு செய்தார். அதன் பின்னர், கவர்னரின் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார்.

அதன் பின்னர், நாட்டுப்பண் இசைக்க முதல் நாள் கூட்டம் நிறைவடைந்தது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் அனைவரிடமும் விடைபெற்று சென்றார்.

Next Story