தமிழகத்தில் 6,596 பேருக்கு கொரோனா கடந்த மாதத்தைவிட 30 ஆயிரம் பாதிப்பு குறைந்தது


தமிழகத்தில் 6,596 பேருக்கு கொரோனா கடந்த மாதத்தைவிட 30 ஆயிரம் பாதிப்பு குறைந்தது
x
தினத்தந்தி 23 Jun 2021 10:41 PM GMT (Updated: 2021-06-24T04:11:54+05:30)

தமிழகத்தில் நேற்று 6,596 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த மாதத்தின் இதே நாளை ஒப்பிடுகையில் பாதிப்பு 30 ஆயிரத்திற்கு மேல் சரிந்து குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

தமிழகத்தில் தொடர்ந்து தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த மாதம் 21-ந்தேதி அதிகபட்சமாக 36 ஆயிரத்து 184 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் ஒரே மாதத்தில் அதாவது 33 நாட்களில் 29 ஆயிரத்து 588 அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 66 ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3,709 ஆண்கள், 2,887 பெண்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 596 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

252 குழந்தைகளுக்கு தொற்று

இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 252 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 989 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 793 பேரும், ஈரோட்டில் 686 பேரும், சேலத்தில் 472 பேரும், சென்னையில் 396 பேரும், திருப்பூரில் 419 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 44 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 8 லட்சத்து 51 ஆயிரத்து 147 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 14 லட்சத்து 28 ஆயிரத்து 916 ஆண்களும், 10 லட்சத்து 14 ஆயிரத்து 461 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 24 லட்சத்து 43 ஆயிரத்து 415 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 88 ஆயிரத்து 419 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 52 ஆயிரத்து 69 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

166 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 109 பேரும், தனியார் மருத்துவமனையில் 57 பேரும் என 166 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அந்தவகையில் தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 25 பேரும், சென்னையில் 20 பேரும், வேலூரில் 15 பேரும், திருப்பூர், சேலம், நாகப்பட்டினம், கடலூரில் தலா 8 பேர் உள்பட நேற்று மட்டும் 31 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 35 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 31 ஆயிரத்து 746 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

70 ஆயிரம் படுக்கைகள் காலி

தமிழகத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் 12 ஆயிரத்து 427 பேரும், ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகளில் 5 ஆயிரத்து 664 பேரும், ஐ.சி.யு. படுக்கைகளில் 5 ஆயிரத்து 110 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தவகையில் நேற்று 37 ஆயிரத்து 526 ஆக்சிஜன் படுக்கைகள், 27 ஆயிரத்து 129 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 5 ஆயிரத்து 145 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 69 ஆயிரத்து 800 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது. அதேபோல், கொரோனா பராமரிப்பு மையங்களில் 8 ஆயிரத்து 966 பேர் சிகிச்சையில் உள்ளனர். அந்தவகையில் 59 ஆயிரத்து 903 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.

10,432 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 10,432 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 1,488 பேரும், ஈரோட்டில் 1,307 பேரும், திருப்பூரில் 857 பேரும், சேலத்தில் 743 பேரும் அடங்குவர். இதுவரையில் 23 லட்சத்து 58 ஆயிரத்து 785 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 52 ஆயிரத்து 884 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story