கொரோனா தடுப்பூசி பெயரை தெளிவுபடுத்தி சான்றிதழ் வழங்க நடவடிக்கை மத்திய அரசுக்கு, ஜி.கே.வாசன் கோரிக்கை


கொரோனா தடுப்பூசி பெயரை தெளிவுபடுத்தி சான்றிதழ் வழங்க நடவடிக்கை மத்திய அரசுக்கு, ஜி.கே.வாசன் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2021 9:56 PM GMT (Updated: 2021-06-25T03:26:48+05:30)

குவைத் நாட்டுக்கு செல்லும் தொழிலாளர்களுக்காக கொரோனா தடுப்பூசி பெயரை தெளிவுபடுத்தி சான்றிதழ் வழங்க நடவடிக்கை மத்திய அரசுக்கு, ஜி.கே.வாசன் கோரிக்கை.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இருந்து குவைத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் கொரோனா தொற்றின் காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். உலகளவில் தற்போது கொரோனாவின் தொற்று குறைந்த காரணத்தால் அவர்கள் மீண்டும் பணிபுரிய குவைத் திரும்புவதற்கான ஆயத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது குவைத் நாட்டுக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. குவைத் நாட்டில் ‘கோவிஷீல்டு’ அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஒன்றாகும். ஆனால் அது அந்நாட்டில் ‘ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா’ தடுப்பூசி என்று அழைக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி ‘கோவிஷீல்டு’ என்ற பெயரைக் கொண்டிருப்பதால் இது குவைத் நாட்டால் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து குவைத் திரும்பும் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அதனால் இந்தியாவில் வழங்கப்படும் தடுப்பூசி ‘ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா’ (கோவிஷீல்டு) தடுப்பூசி என்று குறிப்பிட்டு சான்று அளித்தால் தமிழகம் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களில் இருந்தும் அவர்கள் திரும்பவும் குவைத் செல்ல ஏதுவாக இருக்கும். மத்திய அரசும், வெளியுறவுத்துறை அமைச்சகமும் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகமும், அதிகாரிகளும் ஆலோசனை செய்து அவர்களுக்கு உரிய சான்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story