செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம்: மக்களவையில் மோடி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் கே.எஸ். அழகிரி பேட்டி


செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம்: மக்களவையில் மோடி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் கே.எஸ். அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 21 July 2021 9:09 PM GMT (Updated: 2021-07-22T02:39:11+05:30)

செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஸ்.அழகிரி கூறினார்.

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளை பயன்படுத்தி நமது நாட்டின் எதிர்கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள், ஊடகவியாளர்கள் என சுமார் 300 பேரின் தொலைபேசி இணைப்புகள், செல்போன் பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக உள்ளது. குறிப்பாக ராகுல்காந்தியின் பேச்சும் உளவு பார்க்கப்பட்டுள்ளது. நமது நாட்டு ராணுவ ரகசியங்கள் கூட கண்காணிக்கப்பட்டு உள்ளது. இந்த சதி திட்டத்திற்கு மோடி அரசாங்கம் துணை போகியுள்ளது. இந்த விவகாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் தெரிந்து இருக்கிறது.

அமித்ஷா ராஜினாமா செய்யவேண்டும்

நம் வீட்டில் நடப்பது, அண்டை நாடுகளுக்கு தெரிகிறது. ஜனநாயகத்தையே சீரழிக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. தன்னுடைய உளவு அமைப்புகளை கூட இந்திய அரசு நம்பவில்லை. அதிகாரிகள், நீதிபதிகள், ஊடகவியலாளர்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் மோடி மக்களவையில் இதுகுறித்து ஒரு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நீதிபதி ஒருவரை நியமித்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கவர்னர் மாளிகை நோக்கி பேரணி

தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாளை வியாழக்கிழமை (அதாவது இன்று) சென்னையில் எனது தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல உள்ளோம். அரசு அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் இந்த போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story