வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி மின்சாரம், பஸ் கட்டணம், சொத்து வரியை உயர்த்தி விடாதீர்கள்


வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி மின்சாரம், பஸ் கட்டணம், சொத்து வரியை உயர்த்தி விடாதீர்கள்
x
தினத்தந்தி 9 Aug 2021 8:48 PM GMT (Updated: 2021-08-10T02:18:11+05:30)

வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி மின்சாரம், பஸ் கட்டணம், சொத்து வரியை உயர்த்தி விடாதீர்கள் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி மின் கட்டணம், பஸ் கட்டணம், சொத்து வரியை உயர்த்த கூடாது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெள்ளை அறிக்கை

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் பொதுக்கடன் ரூ.5.70 லட்சம் கோடியாகவும், மின்வாரியம், போக்குவரத்து கழகங்கள் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ.2 லட்சம் கோடியாகவும் அதிகரித்து விட்டதாக அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் அதிகரித்து விட்டதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர், கடன் சுமையில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க ஆக்கபூர்வமான செயல் திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பார் என்று நம்புவோம்.

சுமையை சுமத்த கூடாது

பயனற்ற இலவசங்கள், மானியங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். அரசின் உதவிகள் தேவையானோருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலை. அமைச்சரின் பேச்சை பார்க்கும்போது மின்கட்டணம், பஸ் கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தும் உயர்த்தப்படுமோ? என்ற பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடாது. தமிழ்நாட்டின் நிதிநிலைமையை மேம்படுத்த வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், அது நிர்வாக சீர்திருத்தங்களின் மூலமாக செய்யப்பட வேண்டுமே தவிர, மக்கள் மீது சுமையை சுமத்துவதன் மூலமாக இருக்கக்கூடாது என்பதை தமிழக அரசுக்கான பா.ம.க.வின் ஆலோசனையாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story