விரைவில் நீட் தேர்வு முடிவு: மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த அரசு சிறப்பு நிகழ்ச்சி


விரைவில் நீட் தேர்வு முடிவு: மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த அரசு சிறப்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 10 Oct 2021 9:54 AM GMT (Updated: 10 Oct 2021 9:54 AM GMT)

நீட் தற்கொலையை தடுத்து மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்திட கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் இணைந்து பிரபலங்களைக் கொண்டு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.

சென்னை,

கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு அமலுக்கு வந்ததில் இருந்து, தேர்வு மற்றும் எதிர்காலம் குறித்த அச்சத்தால் இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு தற்கொலையை தடுத்திடும் வகையில் கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

நீட் தேர்வு முடிந்ததும், சிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் விரைவில் நீட் தேர்வு முடிவு வெளியாக உள்ளதால், மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை தடுக்கவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும் கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து, ‘ஜெயித்துக் காட்டுவோம் வா’ என்ற பெயரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசினர். தன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை நினைவு கூர்ந்த ஆர்.ஜே.பாலாஜி, தேர்வுகளில் தோல்வியை தழுவியிருந்தாலும் தற்போது நல்ல நிலையில் இருப்பதாக கூறினார். 

மேலும் மருத்துவப் படிப்புகளில் எம்.பி.பி.எஸ். தவிர்த்து கொட்டிக் கிடக்கும் பிற படிப்புகள், அந்த படிப்புகளில் இருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. 

Next Story