அ.தி.மு.க. பல நூற்றாண்டு காலம் தமிழ் போல் வாழ்க பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து


அ.தி.மு.க. பல நூற்றாண்டு காலம் தமிழ் போல் வாழ்க பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து
x
தினத்தந்தி 17 Oct 2021 6:59 PM GMT (Updated: 2021-10-18T00:29:14+05:30)

மாபெரும் மக்கள் சக்தி கொண்ட: அ.தி.மு.க. பல நூற்றாண்டு காலம் தமிழ் போல் வாழ்க பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். உருவாக்கிய மக்கள் இயக்கம் 49 ஆண்டுகள் கடந்து அ.தி.மு.க. தன் பொன்விழாவை தொடங்கிய நன்னாள். தொண்டர்கள் பலத்தையும், மக்கள் செல்வாக்கையும் நம்பி தனியே களம் காண முடிவு செய்து 1977-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்த போது வியப்புடன் எம்.ஜி.ஆரை இந்திய தேசம் திரும்பி பார்த்தது. அதன்பிறகு அவர் உயிருடன் இருந்தவரை தோல்வியை சந்திக்கவில்லை. அவருக்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் கட்டிக்காத்த ஜெயலலிதா தலைமையில் 1997-ம் ஆண்டு நெல்லையில் அ.தி.மு.க.வின் வெள்ளிவிழா மாநாட்டில் அப்போதைய பா.ஜ.க. தேசிய தலைவர் எல்.கே.அத்வானி அழைக்கப்பட்டிருந்தார். அடுத்து மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது.

சித்தாந்தங்களிலும், சிந்தனைகளிலும், கொள்கைகளிலும், கோட்பாடுகளிலும் தொண்டர்கள் மத்தியிலும் இயல்பாக ஒத்துப்போகும் கட்சி அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும். எம்.ஜி.ஆர். அமைத்து தந்த உறுதியான அடித்தளம், ஜெயலலிதா அமைத்து தந்த வலுவான கட்டமைப்பு தமிழகத்தில் அ.தி.மு.கவை எக்கு கோட்டையாக நிலை நிறுத்தியது. தற்போது அந்த இரு தலைவர்களில் இருக்கும் பிம்பங்களாக திகழும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்றிணைந்து இருவரும் கண்களைப் போல கட்சியை காத்து வருகிறார்கள். அ.தி.மு.க. என்னும் மாபெரும் மக்கள் சக்தி பல நூற்றாண்டு காலம் தமிழ் போல் வாழ்க என தமிழக பா.ஜ.க. சார்பில் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story