மேல்மருவத்தூரில் வாகன சோதனையின்போது ரூ.1 கோடிக்கு விற்க முயன்ற சாமி சிலைகள் பறிமுதல்


மேல்மருவத்தூரில் வாகன சோதனையின்போது ரூ.1 கோடிக்கு விற்க முயன்ற சாமி சிலைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Oct 2021 11:52 PM GMT (Updated: 17 Oct 2021 11:52 PM GMT)

மேல்மருவத்தூரில் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற சாமி சிலைகளை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

தமிழகத்தில் சிலை திருட்டு சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் ஐ.ஜி. தினகரன் தலைமையில் இதுகுறித்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர் இந்திரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், பாலசந்தர் உள்ளடங்கிய குழுவினர், மேல்மருவத்தூர் சித்தாமூர் சந்திப்பு அருகே நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

7 பேர் கைது

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வாகனத்தில் வந்த சிலரை போலீசார் மடக்கி விசாரித்தனர். அப்போது தொன்மையான மீனாட்சி அம்மன் சிலை உள்பட சாமி சிலைகளை ரூ.1 கோடிக்கு விற்பதற்காக மோட்டார் சைக்கிள்களில் எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சாமி சிலைகளை பறிமுதல் செய்த போலீசார், சாமி சிலைகளை விற்க முயன்ற கார்த்திக் (வயது 29), மூர்த்தி (33), சுந்தரமூர்த்தி (25), குமரன் (30), அசோக் (33), அறிவரசு (43), அப்துல்ரகுமான் (24) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வேலூரில் ஒரு தொன்மையான ரிஷபர் சிலையும் மீட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து குற்றவாளிகள் 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story