கள்ளக்குறிச்சி பட்டாசு விபத்து; ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு


கள்ளக்குறிச்சி பட்டாசு விபத்து; ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Oct 2021 5:23 PM GMT (Updated: 2021-10-26T22:53:26+05:30)

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார்.


கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் இன்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.  இந்த நிலையில், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பட்டாசு விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.  இதனை தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீ விபத்தில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்தில் 5 பேர் பலியான சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.  இதேபோன்று, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.  இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.


Next Story