பொதுத்தேர்வை மே மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் அரசுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


பொதுத்தேர்வை மே மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் அரசுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Dec 2021 12:20 AM IST (Updated: 1 Dec 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, பொதுத்தேர்வை மே மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு இடங்களில் பள்ளிகள் இயங்காத சூழ்நிலை ஏற்பட்டு, மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை இயல்பாக டிசம்பர் 15-ந்தேதி வரை இருக்கும் என்றாலும், தற்போது நிலவும் பருவநிலை மாற்றத்தில் வடகிழக்கு பருவமழை எத்தனை நாள் நீடிக்கும்? என்பது புரியாத புதிராக இருக்கிறது. முந்தைய ஆண்டுகளில் டிசம்பர் மாதம் இறுதிவரை வடகிழக்கு பருவமழை பெய்துள்ள நிலையில், இதனை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது எஞ்சியிருக்கின்ற காலங்களில் பாடத்திட்டங்களை முடிப்பது என்பது மிகவும் சிரமம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கமுடியாது.

மன அழுத்தத்தை அதிகரிக்கும்

மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வுக்கு தயாராகுவதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களை ஓரளவுக்கு குறைப்பதும், பொதுத்தேர்வை மே மாதத்தில் நடத்துவதும்தான் பொருத்தமாக இருக்கும் என்ற கருத்து மாணவ-மாணவிகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்தநிலையில் மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், பாடத்திட்டங்கள் குறைக்கப்படாது என்றும், கூடுதல் வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கூறியிருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பு மனஅழுத்தத்தை அதிகரிக்க வழிவகுக்குமே தவிர, மாணவ-மாணவிகள் மனநிம்மதியுடன் தேர்வுக்கு தயாராக வழிவகுக்காது.

தள்ளிவைக்க வேண்டும்

பாடத்திட்டங்களை குறைத்து பொதுத்தேர்வை மே மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்பதே மாணவ-மாணவிகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு மாணவ-மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story