காலாவதியான கல்குவாரிகளில் ஜல்லி உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


காலாவதியான கல்குவாரிகளில் ஜல்லி உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Dec 2021 3:50 AM IST (Updated: 15 Dec 2021 3:50 AM IST)
t-max-icont-min-icon

காலாவதியான கல்குவாரிகளில் ஜல்லி உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

சென்னை,

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து கல் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 மாதங்களாக கல் குவாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் ‘பெர்மிட்’ முறையில் மாற்றம் செய்யப்பட்டது.

15 நாட்கள் அல்லது ஒரு மாதத்துக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த ‘பெர்மிட்’ முறை தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை என்று மாற்றப்பட்டு உள்ளதாகவும் கல்குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் 3 நாட்களுக்கு ஒருமுறை ஜல்லி உற்பத்தியாளர்கள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. தேவையான அனுமதியைப் பெற ஒருநாள் முழுமையாக செலவாகிறது என்று ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது. எனவே, இந்த அரசு உடனடியாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை ‘பெர்மிட்’ வழங்கப்படும் என்ற புதிய நடைமுறையினை மாற்றி, பழையபடி 15 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது மாதத்திற்கு ஒருமுறையோ பெர்மிட் வழங்க வேண்டும். காலாவதியான கல் குவாரிகளில் எந்தவிதமான பெர்மிட்டும் பெறாமல் ஜல்லியை உற்பத்தி செய்து விற்பனை செய்வதை அனுமதிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க. அரசில், எப்படி கல் குவாரிகளின் வருவாய் முழுமையாக அரசின் கருவூலத்துக்கு சென்றடைந்ததோ, அதன்படி இப்போதும் கல் குவாரிகள் மூலம் வரவேண்டிய வருவாய் முழுவதும் அரசின் கருவூலத்தைச் சென்றடைவதை, இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story