“மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறையை உடனே செயல்படுத்த வேண்டும்” ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


“மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறையை உடனே செயல்படுத்த வேண்டும்” ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Dec 2021 12:32 AM IST (Updated: 20 Dec 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

2 மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன் அளவீடு செய்யப்படுவதால் அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்கும் வகையில் மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும். இதனால்2 மாதங்களுக்கு ஆயிரம் யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரையில் பயன் பெறுவார்கள் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தரப்பட்டது. இந்த வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர்களை வஞ்சிப்பது போல் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது.

டெல்லியில் பேட்டியளித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர், "உள் கட்டமைப்புகளை பலப்படுத்திய பின் தமிழகத்தில் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும்" என்று கூறியுள்ளார். இதனுடைய உள்ளார்ந்த பொருள், நீட் தேர்வு ரத்து, 7 பேர் விடுதலை, கல்விக் கடன் ரத்து போன்ற அறிவிப்புகள் போல் இதுவும் குழிதோண்டி புதைக்கப்படும் என்பதுதான்.

போகாத ஊருக்கு வழி

ஒரு மாநிலத்தினுடைய மின் துறையின் உள்கட்டமைப்பை பலப்படுத்துவது என்பது அந்த மாநிலத்தில் பெருகிவரும் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலாக மின் உற்பத்தி நிறுவு திறனை ஏற்படுத்த ஏதுவாக அனல் மின் திட்டங்கள், நீர் மின் திட்டங்களை புதிதாக செயல்படுத்துவது, அனல் மின் திட்டங்களுக்கு தேவையான நிலக்கரியை நிரந்தரமாக கொள்முதல் செய்வது, மின் மாற்றிகளை மாற்றியமைப்பது, கம்பிவடம் மாற்றுவது, நவீன மீட்டர் பொருத்துவது என பல காரணிகளை உள்ளடக்கிய தொடர் பணிகளாகும்.

இந்த பணி ஒரு தொடர் சங்கிலி போல காலத்துக்கேற்ப, தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, தேவைக்கேற்ப தொடர்ந்து கொண்டே இருக்கும். உள்கட்டமைப்பு பணிகள் எப்போது முடிந்து, இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்பதற்கு ஏதாவது கால அளவு இருக்கிறதா? என்றால் நிச்சயம் இல்லை.

அமைச்சர் ஏதாவது கால அளவை குறிப்பிட்டு இருக்கிறாரா? என்றால் அதுவும் இல்லை. அமைச்சரின் பேச்சு போகாத ஊருக்கு வழி சொல்வது போல அமைந்திருக்கிறது. எனவே உள்கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்ட பின் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என்பது இந்த வாக்குறுதி அதோகதி என்பதை சூசகமாக தெரிவிக்கிறது.

மக்களை வஞ்சிக்கும் செயல்

மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வாக்குறுதியையும் நீர்த்து போகச்செய்யும் நடவடிக்கையைத்தான் தி.மு.க. அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது. இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். இந்த மக்கள் விரோத செயலுக்கு அ.தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா கொடுந்தொற்று, விஷம் போல் ஏறும் விலைவாசி, வேலையின்மை, ஊதிய உயர்வின்மை என பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மாதாந்திர மின் கணக்கீடு என்ற வாக்குறுதியையாவது இந்த அரசு செயல்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில், மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story