வேலூர் நகை கடையில் துணிகர கொள்ளை: 16 கிலோ தங்க, வைர நகைகள் மீட்பு


வேலூர் நகை கடையில் துணிகர கொள்ளை: 16 கிலோ தங்க, வைர நகைகள் மீட்பு
x

வேலூர் நகைக்கடையில் முகமூடி அணிந்து கொள்ளையடித்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவர் சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்த 16 கிலோ தங்க, வைர நகைகள் மீட்கப்பட்டன.

வேலூர்,

வேலூர் -காட்பாடி சாலையில் தோட்டப்பாளையத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 15-ந் தேதி மர்மநபர் சுவரில் துளைபோட்டு உள்ளே சென்று சுமார் 16 கிலோ தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். உள்ளே புகுந்த மர்மநபர் சிங்க படம் கொண்ட முகமூடி, தலையில் விக் அணிந்திருந்தார். இந்த கொள்ளை சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளையனை பிடிக்க 8 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கட்டிட தொழிலாளி கைது

அதில் நகைக்கடையில் கொள்ளையடித்தது பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த டீக்காராமன் (வயது 23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த நகைகளை ஒடுகத்தூர் உத்திரகாவேரி ஆற்றங்கரையோரம் உள்ள சுடுகாட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

நகைகள் தோண்டி எடுப்பு

இதையடுத்து நேற்று போலீசார் நகை புதைத்து வைக்கப்பட்டிருந்த சுடுகாட்டு பகுதிக்கு சென்றனர். உடன் டீக்காராமனையும் அழைத்துச் சென்றனர். அங்கு அவர், நகைகளை புதைத்த இடங்களை அடையாளம் காட்டினார்.

ஒரு இடத்தில் சுமார் 10 கிலோ நகைகள் பிளாஸ்டிக் பையில் இருந்தது. அதன் அருகே மற்றொரு இடத்தில் சுமார் 6 கிலோ நகைகளும் இருந்தன. பின்னர் அவற்றை கைப்பற்றி போலீசார் எடுத்துச் சென்றனர்.

கட்டிட தொழிலாளி

கைதான டீக்காராமன் கட்டிட தொழிலாளி. அவர் தன்னந்தனியாகவே பல்வேறு இடங்களுக்கு சென்று திருடி வந்துள்ளார்.

Next Story